1806. வலந்தங் கியசீ ரொற்றிநகர்
வள்ள லிவர்தாம் மௌனமொடு
கலந்திங் கிருந்த வண்டசத்தைக்
காட்டி மூன்று விரனீட்டி
நலந்தங் குறப்பின் னடுமுடக்கி
நண்ணு மிந்த நகத்தொடுவா
யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, வன்மை பொருந்திய சீருடைய திருவொற்றியூர் உறையும் வள்ளலாகிய இவர் மவுன விரதமுடையராய் வந்தவர், பெண்ணும் ஆணுமாய்க் கூடியிருந்த மயில் இரண்டைக் காட்டி, காட்டிய சுட்டு விரலுடன் ஏனை விரல் மூன்றையும் நீட்டி, பின்பு அவற்றுள் நடு விரலை மடக்கி, இப்போது பொருந்துமிந்த நகபதம் அமையக் கூடுதற்கு வாய்ந்த இல்லத்தைத் தமது கையில் குறித்து நோக்குகின்றார்; இது என்னையோ. எ.று.
வெயில் பனி காற்று முதலியவற்றால் கேடுறாமல் செம்மையுடன் இருக்கும் ஊராதல் தோன்ற, “வலம் தங்கிய சீர் ஒற்றிநகர்” என்றும், அங்குறையும் தியாகப்பெருமான் பிச்சைத் தேவராய் வருதல் விளங்க “வள்ளல்” என்றும் கூறுகின்றார். பேசாமைவிரதமுடன் வருதல் பற்றி, “மவுனமொடு” என்று பலியிடும் நங்கை உரைக்கின்றாள். மனைமுற்றத்தில் சேவலும் பெடையுமாய மயில்கள் புணர்ந்து கலந்திருக்கும் செவ்வியில் அவற்றைப் பலியிடுவான் சென்ற எனக்குக் காட்டினர் என்பாளாய், “கலந்து அங்கிருந்த அண்டசத்தைக் காட்டி” என்று சொல்லுகிறாள். அண்டசம் - முட்டையிற் பிறக்கும் பறவையினத்து மயில். வளமனைகளில் மயில், புறா, கோழி முதலிய அண்டங்களை வளர்ப்பது பண்டை நாளை மரபு. இளமகளிரைக் கூடும் ஆடவர் மகளிர் நகிலில் மேலே மூன்றும், அடியில் ஒன்றுமாகப் பிறைபோல நகக்குறி அமையப்பற்றிக் கூடியின் புறுவது காம நூல் முறை. நகிலின் மேற்பதியும் நகக்குறியும் கீழ்ப்பதியும் நகக்குறிப்பும் சேர நோக்கும்போது மயிலின் காலடி தோய்ந்தாற் போலக் காணப்படுதலால், அதனைக் கேகயபதம், சிகிநகப்பதம் என்றும், வாய்வைத்தமைக்கும் பற்குறியைத் தந்தபதம் என்றும் உரைக்கின்றார்கள். இக்குறிப்புப் புலப்பட, “மூன்று விரல் நீட்டி நடுமுடக்கி நண்ணும் இந்த நகத்தொடு கூடற்கு வாய்ந்த இல்லம் தம் கரத்தால் குறிக்கின்றார்” என்று சொல்லுகின்றாள்.
பலிவேண்டி வந்தவர், புணர்ச்சியின்பப் பலிவேண்டி அதன் இயல்பும் அதற்கேற்ற இடமும் சுட்டுகின்றார் என்றவாறு. (35)
|