1807. தேனார் பொழிலா ரொற்றியில்வாழ்
தேவ ரிவர்வாய் திறவாராய்
மானார் கரத்தோர் நகந்தெரித்து
வாளா நின்றார் நீளார்வந்
தானா ருளத்தோ டியாதென்றேன்
றங்கைத் தலத்திற் றலையையடி
யேனா டுறவே காட்டுகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவொற்றியூரில் வாழ்கின்ற பிச்சைத் தேவராகிய இவர் வாய் திறவா மவுனியராய் வந்து, மானேந்தும் கையில் ஒரு நகத்தை ஓசை யுண்டாகத் தட்டி வெறிதே நின்றாராக, அவரைக் கண்டு அன்புமிக்க உள்ளத்துடன் வேண்டுவது யாது என வினவினேன்; அவர் தமது கையில் கொண்ட தலையை யான் காணக் காட்டுகின்றார்; இதுதான் என்னை? எ.று.
தேன் : தேன்மிக்க மலர் மேற்று. சிவ வடிவம் கையில் மான் ஏந்துவது பற்றி, “மானார்கரம்” என்று மொழிகின்றார். பேசாத மவுனியாதலின் தமது வரவுக் குறிப்பை யுணர்த்தற்குக் கைவிரல் நகத்தால் ஓசை யுண்டாகத் தட்டித் தெரிவித்தமை தோன்றக் “கரத்து ஓர் நகம் தெறித்து வாளா நின்றார்” என்றார். கரத்து நகம் தெறித்தலாவது, கைந்நகத்தால் பலியோட்டைத் தட்டித் தம்மைக் காணாமலும் வருகையோசை கேளாமலும் இருந்தாரைக் கண்டு கேட்கச் செய்தல். தெறித்தல் : தெரிய வெளிப்படுத்தற் பொருளில் வந்தது. வாய் திறவாத மவுனி யென்பதை வற்புறுத்தற்கு “வாளா நின்றார்” என்று சொல்லுகிறாள். ஆர்வம் - அன்பு மிகுதி. நீளார்வம் - மிக்குற்ற ஆர்வம். நகம் தெறித்த ஓசை கேட்டு அவர் பக்கல் திரும்பி நோக்கி மிக்குற்ற ஆர்வத்தால் வேண்டுவது என்று வினவலுற்று “யாது என்றேன்” தமது கையிற் பலியேற்றற்கு வைத்திருந்தது பிரமன் தலையோடாதலால், அதனை “தலை” என்று குறித்து, அதன்கண் உண்பலியை தலத்தில் தலையை அடியேன் நாடுறக் காட்டுகின்றார்” என்று சாற்றுகின்றார். நாடுறல் - இனிது காண்டல்.
வேண்டியது யாது என்றேனுக்குக் கையிலுள்ள பலியோட்டைக் காட்டுகின்றார் என்பதாம். (36)
|