1808.

     செச்சை யழகர் திருவொற்றித்
          தேவ ரிவர்வாய் திறவாராய்
     மெச்சு மொருகாற் கரந்தொட்டு
          மீண்டு மிடற்றுக் கரம்வைத்தார்
     பிச்ச ரடிகேள் வேண்டுவது
          பேசீ ரென்றேன் றமைக்காட்டி
     யிச்சை யெனையுங் குறிக்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வெட்சி மாலையணியும் அழகுடையரான திருவொற்றியூர்ப் பிச்சைத் தேவராகிய இவர் வாய்திறவா மவுனமேற் கொண்டு கண்டோர் மெச்சுமாறு ஒருமுறை கையால் மற்றொரு கையைத் தொட்டுப் பின்னும் அக் கையைக கழுத்தில் வைத்து என்னை நோக்கினார்; பித்தராகிய அடிகளே, நீர் வேண்டு வதனை வாய்விட்டு விளம்பும் என்றேன்; புன்முறுவலுடன் அன்புருவாய் நிற்கும் என்னைக் குறித்து நோக்குகின்றார். இதுதான் என்னையோ. எ.று.

     செச்சை - வெட்சிமலர்; திருநீறுமாம். கண்டார் உள்ளத்தைக் கவரும் கவின்பெறு வனப்புடையராதல் தோன்றப் பிச்சைத் தேவரை, “செச்சை யழகர்” என்று சிறப்பிக்கின்றார். பேசாமையாகிய நோன்பு மேற்கொண்டனர் என்பாளாய், “வாய் திறவாராய்” என்றாள்; அந்நிலையில் தமது மனக்குறிப்பைக் கையாலும் கண்பிற மெய்ப்பாடுகளாலும் பிறர்க்கு உணர்த்த, வேண்டியவராதலின், வலக்கையால் இடக்கை மணிக்கட்டை தொட்டுக் காப்பிடுவது போல் வளைத்தும், பின்பு அக்கைகளை மீண்டும் கழுத்தில் வைத்து மாலைபோற் சுற்றியும் காட்டின திறத்தை, “மெச்சும் ஒருகால் கரம்தொட்டு மீண்டும் மிடற்று அக்கரம் வைத்தார்” என்று கூறுகின்றாள். காப்பிடுவது போல் கையைத் தொட்டுக் காட்டியதும், கழுத்தில் மாலையிடல் போல்கைகளை வைத்துக் காட்டியதும், கடிமணம் செய்து கொள்ளும் விருப்பம் உடைமை புலப்படுத்தினபடியாம். பலிவேண்டி வந்தவர், அதனை யிடவந்த நங்கையை நோக்கித் தன்னை மணம் செய்து கொள்ளுமாறு கேட்பது தெளிந்த அறிவுடைச் செயலாகாமை கண்ட அந்நங்கை, நீர் என்ன பித்துக் கொண்டவரோ என்று கேட்கலுற்று, “பிச்சர் அடிகேள்” என்று பேசி, அவர்பால் அவள் உள்ளத்தெழுந்த அன்பு முன்னின்று பெயராவாறு பிணித்தமையின், வேண்டுவதை வுரைமின் என்பாளாய், “வேண்டுவது பேசீர்” என்று சொன்னாள். இதுகேட்டு, திருமணம் செய்து கொள்ளும் குறிப்பைத் தெரிவித்தீரே யன்றி, “மணத்திற்கு வேண்டப்படுகிற பெண்ணை யாவள் என்று சொல்லுகின்றீரில்லையே” என்று அவள் சொன்னதாகக் கருதிக் கொண்டு, நீயே அம்மணப்பெண் என்பாராய், தம்மையும் என்னையும் குறித்துக் காட்டுகின்றார் என்பாளாய், “தமைக் காட்டி இச்சை எனையும் குறிக்கின்றார்” என எடுத் தோதுகின்றாள்.

     பிச்சைத் தேவர் வாய்திறவாராயினும் திருமணம் செய்து கொள்க என என்னைக் குறிக்கின்றார் என்பதாம்.

     (37)