1809.

     மன்றார் நிலையார் திருவொற்றி
          வாணர் இவர்தாம் மவுனமொடு
     நின்றார் இருகை யொலியிசைத்தார்
          நிமிர்ந்தார் தவிசின் நிலைகுறைத்தார்
     நன்றார் அமுது சிறிதுமிழ்ந்தார்
          நடித்தார் யாவும் ஐயமென்றேன்
     இன்றா மரைக்கை யேந்துகின்றா
          ரிதுதான் சேடி என்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; சபைியன்கண் நின்றாடும் இயல்பினராகித் திருவொற்றியூரில் வாழ்பவராகிய இப்பிச்சைத் தேவர் பேசாமவுனியாய் வந்து எம்மனைக்கண் நின்றவர் இருகையையும் தட்டி ஓசை செய்தார்; அது கேட்டு அவர்முன் சென்று நின்ற என்னைக் கண்டு நிமிர்ந்தார்; இந்த நிமிரல் ஏன் என எண்ணுகையில் அவருக்கிட்ட ஆசனத்தின் நீளத்தைக் குறைத்தார்; பின்பு நல்ல எச்சிலாகிய வாயமுதத்தைச் சிறிது வெளியே துப்பினார்; சதிப் பாடல் போல் அவிநயம் காட்டி நடித்தார். இவற்றையெல்லாம் பார்த்து யாவும் எனக்கு விளங்கா ஐயமாகவுள்ளன என்றேன்; அவரும் இனிய தமது கையைத் தாமரை மலர்போல் விரித்து ஏந்துகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     மன்று - பொன்னம்பலம், வெள்ளியம்பலம் எனவும், சிற்றம்பலம் பேரம்பலம் எனவும் கூறப்படும் மன்றங்கள். நின்றாடும் இயல்பின் ரென்றற்கு, “நிலையார்” என்று குறிக்கின்றாள். பிச்சைத் தேவராதலின் அது வேண்டித் தமது கையைத் தட்டி ஓசை செய்ததை, “இருகை ஒலி இசைத்தார்” என்று பலியிடும் நங்கை மொழிகின்றாள். கையால் எழுப்பிய ஓசையே உணவு குறித்த தெனினும், ஓசை குறிக்கும் அமலை என்னும் சொல் உண்ணும் சோற்றுக்கும் ஆம் ஆதலால், அதுவும் சோறு வேண்டும் குறிப்பை யுணர்த்திற்று. நிமிர்ந்த செயலில் உள்ள நிமிரல் என்ற சொல் சோற்றைக் குறிக்கும்; “கொக்குதிர் நிமிரல்” (புறம்) என்பர் சான்றோர். தவிசுக்கு, ஆசனம் என்றும் பெயர் கூறுப. அதன் நீளத்தைக் குறைத்துக் காட்டியது, ஆசனத்தின் முதலெழுத்தான ஆகாரத்தைக் குறுக்கி, அசனமாக்கியவாறு. அசனம் - சோறு. எச்சில் துப்பியதில் துப்பு என்னும் உணவு குறிக்கும் சொல் அடங்கியுளது. நடித்தலில் சதி (ஜதி)யடங்கும்; சதி என்பது உண்ணும் உண்டிக்கும் பேர். இவ்வாறு பல குறிப்புக்களால் சோறு வேண்டினார் பிச்சைத் தேவர்: செயலனைத்தும் தனக்கு ஐயத்தையே விளைவித்ததென்பாளாய், “யாவும் ஐயம் என்றேன்” என்று சொன்னாள். ஒரு கவளம் சோறு வேண்டும் எனக் குறிப்பதற்காகக் கையை விரித்தேந்திய கருத்துப் புலப்பட “இன்தாமரைக் கையேந்துகின்றார்” என்கின்றாள்.

     பலி வேண்டி வந்தவர் ஒலியிசைத்தல், நிமிரல் முதலிய செயல்களை உணவு வேண்டும் குறிப்புணர்த்தற் பொருட்டுச் செய்தார்; விளங்காமையால் ஐயமென்றேன்; கையை ஏந்திக் காட்ட உண்மை புலனாயிற்று என்பதாம்.

     இந்த மவுன மேற்கோளும் செயல்வகையும் யாவும் ஐயத்துக்கிடமென்றேனாக, அவரும் முறுவலித்து, என் மார்பின் தனம் குறித்துத் தம் கையை ஏந்துகிறார் என்பதுமாம்.

     (38)