11. மருண் மாலை விண்ணப்பம்

        மருள் மாலை யாவது மருளும் இயல்பு. அந்தாதியாலமைந்த இதன்கண் மனத்தின் மருளும் தன்மையை யுரைத்து அருண் ஞானம் வழங்குக எனத் தணிகை முருகன் திருமுன் விண்ணப்பம் செய்கின்றார். மனத்தின் வன்மைத் தன்மையும் நெஞ்சின் வஞ்சக நினைவும் உடற் பிணியின் துன்பமும் வஞ்சகர் சார்பும் மண்ணக வாழ்வின் மயக்கமும் அருள் பெற விழைந்த ஏக்கமும் திருவடிப் பேற்றில் வேட்கை மிகுதியும் அருள் ஞானப்பேறும் நினைந்து மயங்கும் திறம் இங்கே கூறப்படுவது காண்க.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

181.

    சொல்லும் பொருளுமாய் நிறைந்த
        சுகமே யன்பர் துதிதுணையே
    புல்லும் புகழ்சேர் நற்றணிகைப்
        பொருப்பின் மருந்தே பூரணமே
    அல்லும் பகலு நின்னாமம்
        அந்தோ நினைந்துன் னாளாகேன
    கல்லும் பொருவா வன்மனத்தாற்
        கலங்கா நின்றேன் கடையேனே.

உரை:

     பொருந்திய புகழ் பெற்ற நல்ல தணிகை மலையில் மேவிய மலை மருந்தாகியவனே, நலத்தின் நிறைவே, சொல்லும் பொருளுமாய் நிறைந்த இன்பமே, அன்பராய்த் துதிப்பவர்க்குத் துணையானவனே, இரவும் பகலும் எப்போதும் நின்னுடைய திருப் பெயரையே நினைந்து நினக்கு ஆளாகா தொழிந்தேனாய்க் கடையனாகிய யான் கல்லுக்கும் ஒப்பாகாமல் வன்மை மிக்க மனம் கொண்டு கலங்குகின்றேன், எ. று.

     தெய்வம் தங்கும் மலைகட்குரிய புகழெல்லாம் பொருந்த உடையதாதலால் தணிகை மலையைப் “புல்லும் புகழ்சேர் நல் தணிகைப் பொருப்பு” எனப் புகல்கின்றார். பிறந்தார்க் கெய்தும் நோயோடு பிறவிப் பிணியும் ஒருங்கு போக்கும் மருந்தாகிய முருகனைத் தன்கண் கொண்டிருக்கும் சிறப்புத் தோன்ற, “நல்தணிகை” என்று கூறுகின்றார். மலைகளில் மருந்துக்குரிய பொருள் கிடைக்குமென்ற உலகுரை பற்றிப் “பொருப்பின் மருந்தே” என்கின்றார். பொருப்பு - மலை. “குறைவிலா நிறை” வெனச் சான்றோர் கூறுவதை வடமொழியில் “பூரணம்” எனவும், “பரிபூரணம்” எனவும் வழங்குவர். சொல்லுலகம் பொருளுலகம் எனப்படும் இரண்டினும் நீக்கமற நிறைந்திருக்கும் நிறைவு தோன்றச் “சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே” என இயம்புகின்றார். பேரின்பப் பெருவாழ்வைச் “சுகம்” என்பவாகலின், அதனை நல்கும் பெருமை பற்றி முருகனைச் “சுகமே” என்று சொல்லுகிறார். மெய்யன் புடையராய்த் துதித்திருப்போர்க்கு அயர்வகற்றி இடையூறு போக்கியருளுது பற்றி, “அன்பர் துதி துணையே” எனப் புகழ்கின்றார். அல்-இரவு. ஆளாகிய பெருமக்கள், “இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவ” னென்றும், “நெஞ்சம் உமக்கே யிடமாக வைத்தேன் நினையா தொரு போதும் இருந்தறியேன்” என்றும், “நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்” என்றும் உரைத்தலால் “அல்லும் பகலும் நின்னாமம் அந்தோ நினைந்துன்னாளாகேன்” எனவும், ஆளாகாமைக்குக் காரணம் மனம் கல்லினும் வலிதானமை என்பார், “கல்லும் பொருவும் வன் மனத்தால்” எனவும், அதனால், தான் துன்புறும் திறத்தைக் “கலங்கா நின்றேன்” எனவும், மக்களினத்திற் கடையனாம் நிலைமையுற்றேன் என்பாராய்க் ‘கடையேன்’ எனவும் இசைக்கின்றார்.

     இதனால் நாமம் நினையாக் கன்மனம் கொண்டு கடையனானமை கூறி வருந்தியவாறாம்.

     (1)