1810. வாரா விருந்தாய் வள்ளலிவர்
வந்தார் மௌன மொடுநின்றார்
நீரா ரெங்கே யிருப்பதென்றே
னீண்ட சடையைக் குறிப்பித்தா
ரூரா வைத்த தெதுவென்றே
னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
தேரார் கரத்தாற் சுட்டுகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; வள்ளலாகிய இவர் இதுவரை வந்திராத விருந்தினராய் வந்து, நமது மனை முற்றத்தில் மவுன மேற்கொண்டு நின்றாராக, பலியிடுவான் சென்ற யான் நீர் யார்? எங்கே இருப்பது என்று வினவினேனாக, தமது நீண்ட சடை முடியைக் குறித்துக் காட்டினார்; உறையும் ஊராகக் கொண்டது யாது என்று யான் மேலும் கேட்ட போது, ஒள்ளிய தமது கையிலேந்திய திருவோட்டை என்னிடத்தில் வைத்துப் பின்னர் வந்து பெற்றுக் கொள்வேன் என்பது புலப்படத் தமது கையாற் சுட்டிக் காட்டுகின்றார்; இது தான் என்னையோ? எ.று.
வாரா விருந்து - அடிக்கடி பயின்று வாராமல் எப்போதோ ஒருகால் வரும் விருந்து. வந்தார் : முற்றெச்சம். நீரார் என்பது, நீர் ஆர் என்றும், நீர் வடிவில் இருக்கும் கங்கையாகிய தேவி என்றும் இருபொருள் படுதலின், ஆர் என்ற வினாவுக்குப் பிஞ்ஞகன் என்றும், கங்கையார் எங்கே இருப்பது என்ற வினாவுக்குச் சடை என்றும் விடை கூறும் முறையில் அமையுமாறு, “நீண்ட சடையைக் குறிப்பித்தார்” என்று சொல்லுகின்றாள். இருப்பது தெரியவில்லையே என்பாளென எதிர் நோக்கி, “நீண்ட சடை” காட்டப்பட்டது என அறிக. ஊராக வைத்தது ஒற்றியூர் என்றற்கு ஓட்டை அவள்பால் வைத்துப் பின் வாங்கிக் கொள்வேன் என்று குறித்தார்; அதனை அவள் “ஒண்கை ஓடு என்னிடத்தில் வைத்து ஏரார் கரத்தால் சுட்டுகின்றார்” என்று கூறுகின்றார். அருள் புரியும் கருத்துடைய கையென்றற்கு “ஒண்கை” என்றும், ஞானப் பொருள் நல்கும் சிறப்பு நோக்கி “ஏரார் கரம்” என்றும் சிறப்பிக்கின்றாள்.
நீரார் எங்கே இருப்பது என்றாட்குச் சடையையும், ஊரார் வைத்தது என்றாட்கு ஓட்டை வைத்தும் சுட்டிக்காட்டி, ஒற்றியூர் என்று விடையிறுத்தார் என அறிக. (39)
|