1811. செங்கேழ் கங்கைச் சடையார்வாய்
திறவா ராக வீண்டடைந்தா
ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா
ணெங்கள் பெருமா னென்றேனென்
னங்கே ழருகி னகன்றுபோ
யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
யிங்கே நடந்து வருகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; கங்கையைச் சிவந்த சடைக்கண் உடையவராகிய பிச்சைத் தேவர் பேசா மவுனியராய் இங்கே வந்தாராக, எங்கள் பெருமானாகிய தாங்கள் எங்கேயிருந்து எவ்விடம் நோக்கி வந்தது என்று வினவினேனாக, என் அருகினின்று ஏழடி அகன்று அவ்விடம் அடைந்து, அங்கே சிறிதுபோது தங்கியிருந்து, பின்பு இவ்விடத்துக்கு நடந்து வருகின்றார்: இதுதான் என்னையோ? எ.று.
கேழ் - நிறம். செங்கேழ் - செம்மை நிறம். செங்கேழ்ச் சடையார் என இயைக்க. கங்கை வெண்ணிறமாதலின் இயையாமை யறிக. காண் என்ற முன்னிலையால், எங்கள் பெருமானாகிய இப் பிச்சைத் தேவர் எங்கேயிருந்து எங்கே அணைந்துள்ளார் என வியந்துரைக்குமாறு புலப்படுகின்றமை நோக்குக. என் அருகினின்று ஏழடி அகன்று நீங்கியது, என்னின் ஏழடியளவு ஒற்றிச் சென்றதாகும்; எங்கேயிருந்து அணைந்தது என்ற வினாவுக்கு ஒற்றியிருந்து அணைந்தது என்பது விடையாயிற்று. விலகியிருத்தலை ஒற்றியிருத்தல் எனவும், விலகிச் செல்வதை ஒற்றிச் செல்வது எனவும் கூறுவது தொண்டைநாட்டு வழக்கு. அங்கே இறைப்போது அமர்ந்து எழுந்து இங்கே நடந்து வருகின்றார் என்றது, எங்கு அனைந்தது என்ற வினாவுக்கு விடை, இறைப்போது-சிறிது பொழுது. ஒற்றியூர்க்குச் செல்வதும், அங்கே சிறிது போது இருப்பதும், பின்பு அன்பர் அகந்தோறும் எழுத்தருளுவதும் குறித்தற்கு இவ்வாறு போக்கும் வரவும் புரிந்து காட்டுகின்றார் என்பதாம். “அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே” என்றும், “இங்கு நம் இல்லங்கள்தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருள வந்தருளும் அங்கண் அரசு” என்றும் மாணிக்கவாசகர் உரைத்தருளுவது காண்க.
எங்கிருந்து எங்கணைவது என்றாட்கு திருவொற்றியூரிற் சிறிது போது தங்கி, அங்கிருந்து அன்பர் அகந்தோறும் சென்றணைவது என விடையிறுத்தவாறு. (40)
|