1812.

     கொடையா ரொற்றி வாணரிவர்
          கூறா மௌன ராகிநின்றார்
     தொடையா ரிதழி மதிச்சடையென்
          துரையே விழைவே துமக்கென்றே
     னுடையார் துன்னற் கந்தைதனை
          யுற்று நோக்கி நகைசெய்தே
     யிடையாக் கழுமுட் காட்டுகின்றா
          ரிதுதான் சேடி யென்னேடி.

உரை:

     ஏடீ, சேடி; இல்லார்க்குக் கொடுப்பவர் மலிந்த திருவொற்றியூர் வாழ்நராகிய பிச்சைத் தேவர், பேசாத மவுனியாய் நமது மனைமுற்றத்தே வந்து நின்றாராக, மாலையாகத் தொடுக்கப்பட்டமைந்த ஆத்தி மாலையும் கொன்றை மாலையும் திங்களும் அணிந்த சடையை யுடைய எமது துரையே, நீவிர் விரும்புவது யாது என்று வினவினேன்; இடையில் உடையாக உடுத்திருந்த பல தையல்களையுடைய கந்தைத் துணியைப் பார்த்து, என்னையும் நோக்கி நகைத்துத் தமது இடையைச் சாரத் தாங்கியிருந்த சூலப் படையைக் காட்டுகின்றார். எ,று.

     “வறியார்க் கொன்று ஈவதே ஈகை” என்று சான்றோர் கூறுதலால், இல்லார்க்குக் கொடுப்பவர் என்று கொடையாளர் குறிக்கப்படுகின்றார்கள். பேசா மவுனம் கூறா மவுனம் எனப்படுகிறது. தொடை - மாலையாகத் தொடுக்கப்படுவது. ஆர் - ஆத்திமாலை. இதழி - கொன்றை; சிவனுக்கு மார்பிலணியும் தாரும் முடியிற் சூடும் கண்ணியும் கொன்றை. ஆரை மாலையாகவும் இதழியைக் கண்ணியாகவும் கொள்ளினும் அமையும், “கண்ணி கார் நறுங் கொன்றை வண்ண மார்பின் தாரும் கொன்றை” (புறம்) என்று சான்றோர் பாடுவது அறிக. மதி - பிறைத்திங்கள். துரை - தலைவர். விழைவேது உமக்கு என்றதை, உமக்கு விழைவு ஏது என மாற்றி இயைக்க. துன்னற் கந்தை - தைக்கப்பட்ட கந்தையுடை. கந்தை தனை உற்று நோக்கி நகை செய்தது, கந்தையுடையால் குளிர் போக்க மாட்டாமையைத் தான் கண்டு, என்னையும் காணச் செய்து, நகைக் கூட்டம் செய்தவாறு; அவரும் நகைத்தார் நானும் நகைத்தேன் என்பது. சூலத்தை காட்டியது, கந்தையாற் போக்கமாட்டாத குளிரைப் போக்குதற்கு ஏற்ற தடித்த போர்வை தருக எனக் குறித்தவாறு. யானை குதிரையாகியவற்றின் முதுகிற் போர்வைக்குச் சூல் எனவும், சூலம் எனவும், பெயர் கூறுப. விழை வேது என்று கொண்டு நீவிர் விழைவது வேதுபோலும் என்றாட்குக் கந்தையைக் காட்டிக் குளிர் மிகுதியுணர்த்திச் சூலத்தைக் காட்டியது, மெய்யுறு புணர்வால் உளதாகும் வெம்மையைக் குறித்தபடியாம். பறவைகள் அடைகாக்க வுளதாகும் வெப்பம் 'சூல் வெப்பம்' என்று வழங்குமாறு காண்க.

     விழைவேது என்றேனுக்கு அவர் கந்தையை நோக்கிச் சூலத்தைக் காட்டிப் போர்வை வேண்டுமாறு குறித்தார் என்பதாம்.

     (41)