1813.

     பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய
          புனித ரிவரூ ரொற்றியதா
     முன்னைத் தவத்தா லியாங்காண
          முன்னே நின்றார் முகமலர்ந்து
     மின்னிற் பொலியுஞ் சடையீரென்
          வேண்டு மென்றே னுணச்செய்யா
     ளின்னச் சினங்கா ணென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ; சேடி, பொன்னை மிகக் கொடுத்தாலும் கூடுதற்கரிய தூயராகிய இத் தேவரது ஊர் திருவொற்றியூராம்; முற்பிறப்புகளில் செய்த தவப்பயனால் யாம் கண்ணிற் காணுமாறு எதிரே வந்து நின்றாராக, முகமலர்ச்சியுடன், மின்னல் போல் விளங்கும் சடையையுடையவரே, நீர் வேண்டுவது யாது என்று வினவினேன்; உண்பதற்குச் செய்யவள் உறையும் இல்லத்தை விரும்பினோம் என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனிதரென்பது, “பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் அன்னோ, பயனில் பொழுதாக் கழிப்பர்” (நாலடி. 162) என்ற முனிவர் பாட்டை நினைப்பிக்கின்றது. புணர்வரிய புனிதரை மனைக்கண் வரவேற்க நேர்ந்ததற்குக் காரணம் முன்னைத் தவம் என்பாளாய்ப் பலியிடும் நங்கை, “முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார்” என்று மொழிகின்றாள். கண்டபொழுதே, அவரது புணர்வருமையும் பெருமையும் தன் மனத்தைப் பிணித்து அன்பு கொள்வித்த தென்பாளாய் “முகமலர்ந்து” என்றும், அவர் வேண்டுவது கொடுத்தற்குத் தாழ்த்தல் ஆகாது என்று உட்கோளால் “என் வேண்டும் என்றேன்” என்றும் உரைக்கின்றார். பிச்சைத் தேவரது சிவவேடம் கண்டு வரவு ஓம்புமாறு புலப்பட, “மின்னிற் பொலியும் சடையீர்” என இறைஞ்சுகின்றாள். “பொலிந்திலங்கும் மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை” (பொன். 1) என்று சேரமான் உரைப்பது காண்க. உணவு வேண்டி, திருமகளாகிய நின்னுடைய மனையை விரும்பி வந்தேம் என்பாராய், “உணச் செய்யாள்இல் நச்சினம் காண் என்கின்றார்”. சொல்லும் சொற்களின் ஓசை, உண்பிக்கும் செயல் இல்லாதவள் இல்லத்தை விரும்பினம் என்பது தோன்ற நின்றது காணலாம். செய்யாள் இல். திருமகள் இருக்கும் வீடு; உணச் செய்யாள் - உண்பிக்கும் விருப்பம் இல்லாதவள் என்றும் பொருள் தோன்ற நின்றமை அறிக.

     என் வேண்டும் என்றாட்கு உணவு வேண்டும்; நல்கும் செய்யவளாகிய நினது இல்லத்தை நச்சி வந்தனம் என்று விடை கூறியவாறு.

     (42)