1814.

     வயலார் சோலை யெழிலொற்றி
          வாண ராகு மிவர்தமைநான்
     செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ்
          சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
     வியலாய்க் கொண்ட தென்னென்றேன்
          விளங்கும் பிநாக மவைமூன்று
     மியலாற் காண்டி யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடி.

உரை:

     ஏடீ, சேடி, வயல்களும் சோலைகளும் பொருந்தியதால் அழகுடைய ஒற்றியூரில் வாழ்பவராகிய இவரை நான் பணிபுரியும் அடியவர்கட்கு அருள் புரிபவராகிய உம்முடைய சிரத்திலும் மார்பிலும் கையிலும் பெருமையாகக் கொண்டது யாது என்று வினவினேன்; மூன்றிலும் பிநாகம் அமைந்து விளங்கும்; அதனைப பிநாகம் என்ற சொல்நின்ற இயல்வகையிற் காண்க என்று சொல்லுகின்றார். இதுதான் என்னையோ. எ.று.

     வயல் - நன்செய் வயல். சோலை - பூமரச் சோலை. இவற்றால் திருவொற்றியூர் அழகு பெறுமாறு விளங்க “எழில் ஒற்றி” என்று சிறப்பிக்கின்றார். வாணர் - வாழ்நர். செயல் என்றது, ஈண்டுச் சிவனுக்கும் சிவனடியார்க்கும் செய்யும் திருப்பணிகளை. முன்பு “அடுத்தார்க்கருள்வார்” (இங்கி. 10) என்றார்; இங்கே “செயலார் அடியார்க் கருளுவது” என்று கூறுகின்றார். சிரம் - தலை; உரம் - மார்பு; கரம் - கை. மூன்றிடத்தும் உளது பிநாகம் என்ற சொல்லும். சொற் கூறும் என்றற்கு “இயலாற் காண்டி” என்று கூறுகிறார். இது கரத்திற் பிநாகம், உரத்தில் நாகம், சிரத்தில் கம் என ஒரு சொல்லின் எழுத்தைக் குறைத்து வேறு பொருள்படப் பாடும் அக்கரச்சுதகம் என்னும் இலக்கணம் அமைந்த சித்திரகவி. அதனாற்றான் “இயலாற் காண்டி” என்று சொல்லுகின்றார். இயல் - இலக்கணம். கையில் பிநாகம் என்னும் வில்; மார்பு, பாம்பாகிய நாகம்; சிரத்தில் கம் எனப்படும் தலை, பிரமகபாலம். இந்த அக்கரச் சுதகம், “ஒரு பொருள் பயந்த ஒரு தொடர் மொழியாய், வருவதை ஓரெழுத்தாய்க் குறை வகுப்பின், சுருங்குபு பலபொருள் தோன்றுவதாய, அருங்கவி அக்கரச் சுதகமாகும்” (மாறன். சொல்லணி. 26)

     சிரத்திலும் உரத்திலும் கரத்திலும் உளது யாது என்று வினவினாட்கு, அக்கரச் சுதகத்தால் பிநாகம் என்ற ஒரு சொல்லால் பிரமகபாலம், பாம்பு, வில் என விடை கூறியவாறாம்.

     (43)