1815.

     பொதுநின் றருள்வீ ரொற்றி
          பூவுந் தியதென் விழியென்றே
     னிதுவென் றறிநா மேறுகின்ற
          தென்றா ரேறு கின்றதுதா
     னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ
          ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
     யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, பொது எனப்படும் அம்பலத்தில் நின்றாடுபவராகிய நீர், திருவொற்றியூரில் உறைகின்றீர்; உம்முடைய கண் அழகில் தாமரைப்பூவின் மிக்குளது என்று சொன்னேனாக, உந்தியது என்றதைத் தாமரைப் பூப்போலும் உந்தியை யுடையதென்று பொருள் கொண்டு, இது நாம் ஊர்தியாகக் கொண்டு ஏறுவது என்று சொன்னார். அது கேட்டதும் நீவிர் ஏறுவதாகிய ஊர்தி எது என்று வினவினேன்; எது என்றும் சொல்லின் இடையில் ஓர் எழுத்தைப் பெய்து அறிந்து கொள்க என்று சொல்லி, என் எதிரே நின்று மிக்க உவப்புடன் நகைக்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     அம்பலம் பொதுவிடம் எனப்படுதல் பற்றி, “பொதுநின் றருள்வீர்” என்று புகன்று, தில்லைப் பொதுவில் நின்று ஆடுபவராயினும், திருவொற்றியூரில் கோயில் கொண்டு காட்சி தருகின்றமையின், “ஒற்றியுளீர்” என்று பிச்சைத் தேவரை நோக்கிப் பலியிடும் நங்கை உரைக்கின்றாள். மேலும் அவருடன் உரையாட விரும்பி, உமது கண் அழகில் தாமரைப் பூவினும் மிக்கிருப்பது என்னை என்று வினவுவாளாய், “விழி பூவுந்தியது என்” என்று கேட்கின்றாள். திருமாலின் கண்கள் தாமரைப்பூப் போல்வது பற்றி, அறிஞர் அனைவரும் அவரைத் “தாமரைக் கண்ணன்” என்பது மரபு, “தாமரைக கண்ணான் உலகு” என்பர் திருவள்ளுவர். சிவனுடைய கண்ணும் தாமரை போன்றமையின், விழி தாமரை போல் உளது என்றற்கு, விழி பூவுந்தியது என்று புகன்றாள். அது கேட்ட தேவர் “பூவுந்தியது” என்பதை மேற்கொண்டு, பூப்போலும் திருவுந்தியை யுடைய திருமால் எனக் கொண்டு, மால் தமக்கு ஊர்தியாகிய எருது என்று குறிப்பாராய், “நாம் ஏறுகின்றது இது என்று அறி” என்று கூறிகின்றார். கருத்து விளங்காமையால், நங்கை அவரையே நோக்கி, நீவிர் ஏறுவது யாது எனக் கேட்கலுற்று, “ஏறுகின்றதுதான் எது என்று உரைத்தேன்” என்று இயம்புகின்றாள். ஏறுவது எருது என விடை கூறுவாராய், எது என்ற சொல்லின் இடையில் ஓர் எழுத்தைப் பெய்து அறிந்து கொள்க என்பாராய், “எது நடுஓர் எழுத்திட்டு அறி (எது என்பதன் இடையில் ரு என்ற எழுத்தைப் பெய்து எருது என்றாக்கி அறிக) நீ என்று சொல்லி எதிர்நின்று உவந்து நகைக்கின்றார்”; “எருது” என்பதை அறியமாட்டாத பேதைமை குறித்து நகைப்பது புலப்பட “எதிர் நின்று உவந்து நகைக்கின்றார்” என்று சொல்லுகின்றாள். தாமரை போலும் உந்தியுடைமை திருமாலுக்குச் சிறப்பு. அதனால் அவற்குப் பதுமநாபன் என்பது ஒரு பெயராயிற்று.

     ஏறுவது எது என்றாட்கு எருது என விடை யளித்தவாறு.

     (44)