1816.

     இட்டங் களித்த தொற்றியுளீ
          ரீண்டிவ் வேளை யெவனென்றேன்
     சுட்டுஞ் சுதனே யென்றார்நான்
          சுட்டி யறியச் சொலுமென்றேன்
     பட்டுண் மருங்குற் பாவாய்நீ
          பரித்த தன்றே பாரென்றே
     யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ. சேடி; அடியார் வேண்டுவதளித்து மகிழ்வித்த திருவொற்றியூரில் தேவரே, நீவிர் இங்கு இவ்வேளை விரும்புவது யாது என்று கேட்டேனாக, யாவரும் சுட்டியுரைக்கும் மகனே யாகும் என்று சொன்னார் எனது வினாவுக்கு நேரிய விடையாக இல்லாமையால் இன்னதெனச் சுட்டிக்காட்டி யான் அறியச் சொல்லுமின் என்று வேண்டினேன்; பட்டாடை யுடுத்த இடையை யுடைய பாவையே, நீ உடலில் தாங்கியிருப்பதன்றோ நான் கூறுவது பார் என்று எண்ணிக் களிப்பெய்துமாறு கூறுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     வேண்டும் அன்பர்க்கு இட்டமாவன அளித்து மகிழ்விக்கும் இயல்பு பற்றி, “இட்டம் களித்த ஒற்றியுளீர்” என உரைக்கின்றாள். “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” என்று பெரியோர் கூறுதல் காண்க. ஒற்றிநகர்க் கண் நம்பியாரூரர்க்கு இட்டமான சங்கிலியாரை மணம் செய்து கொடுத்து மகிழ்வித்த செய்திக்கும் இது குறிப்பாதல் அறிக. இப்பொழுது. . .என்ற கருத்தில் பலியிடும் நங்கை வினவினாளாக, பிச்சைத் தேவர் முருகவேள் எனக் கருதிக் கொண்டு, வேள் என்றது தமக்கு மகனாகிய முருகவேள் என்பாராய், “சுட்டும் சுதனே” என்று கூறுகின்றார். கண் முதலிய பொறிகளாற் பெறுவது சுட்டறிவாகலின், அவ்வாறு அறிய உரைப்பீர்களாக என வேண்டின நங்கைக்கு, முருகவேளைச் சாமி என்றும், சாமியென்னும் சொல் பொன்னுக்கு மாகுலைக் குறித்தும், அவள் அணிந்திருந்த பொன்னணிகளைச் சுட்டி, நீ அணியுருவில் தாங்கிக் கொண்டிருப்பது என்பாராய். “நீ பரிந்தது அன்றோ” என உரைக்கின்றார். முருக வேளுக்குச் சாமி என்று பெயருண்டென்பதைத் திருஞான சம்பந்தர் “சாமிதாதை சரணாகுமென்று தலைசாய்மினோ” (புகலூர்) என்பதனாலறிக. எட்டுங்களிப்பு - எண்களிப்பு; எண்ணிப் பெறும் களிப்பு.

     இவ்வேளை எவன் என்று வினவிய நங்கைக்குத் தனக்குச் சுதனாகிய சாமி; சாமி பொன்னுமாதலின் நீ உடலில் சுமந்தனை என உரைத்தவாறு.

     (45)