1817. பாற்றக கணத்தா ரிவர்காட்டுப்
பள்ளித் தலைவ ரொற்றியினின்
றாற்றப் பசித்து வந்தாரா
மன்ன மிடுமி னென்றுரைத்தேன்
சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ்
சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி
யேற்றுக் கிடந்தா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ..
உரை: ஏடீ, சேடி; பருந்தும் கழுகும் பாறுகாற் பேய்களும் ஆகிய கூட்டத்தைச் சூழவுடையவராகிய இவர் திருக்காட்டுப் பள்ளிக்குத் தலைவர்; திருவொற்றியூரினின்றும் மிகப் பசித்து வந்துள்ளாராம்; இவர்க்கு அன்னம் இடுமின் என்று தோழியர்க்குச் சொன்னேன்; உடனே, இவர் யாம் சோற்றுப் பசியால் இளைத்து வந்தோமேயன்றிச் சிறுசொற்கள் கேட்கப் பொறேம்; கீழாய் நிலத்தைப் பள்ளியாக ஏற்றுக் கிடக்கின்றாய் என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
பாறு - பருந்தும், கழுகும், பாறுகாற் பேயுமாதலின், அவை சுடுகாட்டுக் கூட்டம் என்பது புலப்பட, “பாற்றக் கணத்தார்” என்று கூறுகின்றாள். பாற்றுக்கணம் என்றவிடத்து அகரம் அல்வழிக் கண் வந்த சாரியை. “பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற் பேய் பருந்தொடு கூகை பகண்டையாந்தை குட்டியிட முட்டை கூகை பேய்கள் குறுநரிசென்று அணங்காடுகாட்டில்” (மூத்த) என்று காரைக்காலம்மையார் பாடுவதால் அறிக. காட்டுப்பள்ளி, கீழைத் திருகாட்டுப்பள்ளி மேலைத்திருகாட்டுப்பள்ளி என இரண்டு உண்டு; இரண்டும் காவிரிக்கரையில் உள்ளவை; சான்றோர் பாடிய சால்புடையவை. காட்டுப் பள்ளித் தலைவர் என்றது, காட்டிலுள்ளதோர் இடத்திற்குத் தலைவர் என்று பொருள்படவும், ஆற்றப் பசித்து வந்தாராம் என்றது புறக்கணித்துரைக்கும் ஓசையிலும் நின்றமையின், பலிவேண்டிய தேவர் வெம்மை யுற்றரைப்பார் போலச் “சோற்றுக் கிளைத்தே மாயினும் சொல்லுக்கு இளையேம்” என்று சொல்லுகின்றார். இளைத்தல் ஈண்டுச் சிறுமையுறுதல் மேற்று. சோறு வேண்டி உம்மிடம் வந்தேமேயன்றி, சிறுசொல் கேட்குமளவிற்குக் கீழ்மை யுடையே மல்லேம்; நீதான் பூப்பால் விலக்குண்டு தரைமேற் கிடக்கின்றாய் என்பாராய், “கீழ்ப்பள்ளி ஏற்றுக் கிடந்தாய்” என்று உரைக்கின்றார். பூப்புக் காலத்தில் இளமங்கையர் உயரிய அணையிற் பள்ளி கொள்ளாராகலின், கீழ்ப்பள்ளி யேற்றுக் கிடக்கின்றாய் என்பது இகழ்ச்சிக் குறிப்பாயிற்று.
பசித்து வந்தேம் என்றார்க்குச் சேடியரை நோக்கி அன்னமிடப் பணித்த குறிப்பு நேரில் தானே பலி கொணரமாட்டாத நங்கையின் நிலைமையைப் புலப்படுத்திப் பூப்புக் காலத்தெய்தும் விலக்கினைச் சிறுமையாகக் கூறிப் பிச்சைத் தேவர் இகழ்ந்தமை வெளிப்படுத்தவாறு. (46)
|