1818.

     குருகா ரொற்றி வாணர்பலி
          கொள்ள வகையுண் டோவென்றே
     னொருகா லெடுத்தீண் டுரையென்றா
          ரொருகா லெடுத்துக் காட்டுமென்றேன்
     வருகா விரிப்பொன் னம்பலத்தே
          வந்தாற் காட்டு கின்றாம்வீ
     ழிருகா லுடையா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; பல்வகைப் புள்ளினங்கள் வாழும் திருவொற்றியூர்க்கண் வாழ்பவராகிய பிச்சைத் தேவர் பலிவேண்டி வந்தாராகப் பலியேற்றற்கு உம்பால் பாத்திரமுளதோ என்று கேட்டேனாக, அதனைச் செவியேலாராய், ஒருகால் சொல்லும் என்று சொன்னார்; பலியேற்கும் கலத்தை ஒருகால் எடுத்துக் காட்டும் என்று சொன்னேன்; அதற்கு அவர் இருகால்மறைய அணிந்த உடையுடையவளே, காவிரி நீர் பாயும் பொன்னம்பலத்துக்கு வந்தால் காட்டுவேம் என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     குருகு - கொக்கு, நாரை முதலிய பறவைகள். ஒருபால் நீர் வளமிக்க நன்செய் வயல்களும் ஒருபால் கடலும் இருத்தலின், வயல்களில் மேய்வனவும் கடலில் மேய்வனவுமாகிய பல்வகைப் புள்ளினம் நிறைந்திருத்தலால் “குருகுஆர் ஒற்றி” என்று கூறுகின்றாள். குருகு என்றது கைவளை செய்யும் சங்குகட்கும் உரித்தாதலால், சங்குகள் மேயும் கடற்கரையையுடைய ஒற்றியூர் என்றலும் அமையும். பலி கொள்ளற்குக் கையிற் கலம் (பாத்திரம்) உண்டோ என்று கேட்பவள் “பலி கொள்ள வகையுண்டோ” என்று கேட்கின்றாள். எம்பால் இன்பமாகிய பலி கொள்ளற்கு ஏற்ற திறமுண்டோ என்றதாகக் கொண்டு அதற்குக் காலம் சொல்லுக என்பாராய், “ஒருகால் எடுத்து ஈண்டு உரை” என்று தேவர் கேட்கின்றார். கலம் என்பதில் ககரத்தோடு கால் எடுத்துரைத்தால் காலமாகும். அக்குறிப்பு உணராளாய நங்கை காலை எடுத்துரைக்கும் வகை விளங்காமையால், நீவிரே அதனைக் காட்டும் என்பாளாய் “ஒருகால் எடுத்துக் காட்டும்” என்று சொல்லுகின்றாள். ஒருகாலை ஊன்றி நின்று ஒருகாலைத் தூக்கிக் கொண்டு தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடும் குறிப்பை உரைக்கலுற்று, “பொன்னம்பலத்தே வந்தாற் காட்டுகின்றோம்” என்று சொல்லுகின்றார். எடுத்த பாதத்தின் சிறப்பை, “இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” (கோயில்) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. காவிரியே கொள்ளிடமாய்ப் பிரிந்து தில்லைப்பதியிற் பாய்வதால், “வருகாவிரிப் பொன்னம்பலம்” என்று சிறப்பிக்கின்றார். இருகால் வீழ் உடையாய் என்றது பாதம்புரளச் சீலையுடுத்திருந்தமை தோன்றற்கு, நங்கையே, நீ பாதம் தோன்றற்கு நாணி உடுத்த சீலை அடியில் வீழ்ந்து மறையவுடுத்தாய், பொன்னம்பலம் வந்தால் யாம் திருவடியை நன்கு காணத் தூக்கிக் காட்டுவேம் என்றாராயிற்று.

     (47)