1819. வேலை ஞாலம் புகழொற்றி
விளங்குந் தேவ ரணிகின்ற
மாலை யாதென் றேனயன்மான்
மாலை யகற்று மாலையென்றார்
சோலை மலரன் றேயென்றேன்
சோலை யேநாந் தொடுப்பதென
வேல முறுவல் புரிகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; கடல் சூழ்ந்த நிலவுலகம் புகழும் திருவொற்றிநகர்க்கண் விளங்குகின்ற பிச்சைத் தேவராகிய நீவிர் அணிந்து கொள்ளுகின்ற மாலை யாது என்று வினவினேனாக, பிரமன் திருமால் ஆகிய இருவர்க்குண்டான மயக்கத்தை யகற்ற வல்ல மாலை என்று விடை கூறினார்; அற்றேல் மாலை மருந்தாகுமேயன்றி, சோலை மலரன்றாம் என்று மறுத்தேன்; அவர் சோலையே நாம் மாலையாய்த் தொடுத்தணிவது என்று சொல்லித் தமது விடையை ஏற்றுமாறு புன்முறுவல் செய்கின்றார்; இது தான் என்னையோ. எ.று.
வேலை - கடல். ஞாலம் - நிலவுருண்டை. வானவெளியில் ஒரு பற்றுமின்றித் தொங்குவது கொண்டு நிலவுலகு, “ஞாலம்” எனப்படுகிறது. ஞாலுதல், தொங்குதல் என்னும் பொருளதென அறிக. ஞாலம், ஆகு பெயராய் நன்மக்களை யுணர்த்தும். யாது என்னும் வினாப்பெயர், யாவது என வந்தது. அயனும் திருமாலும் பன்முறையும் பிறந்திறந்து எய்திய களைப்பு இங்கே மால், (மயக்கம்) எனப்படுகிறது. அது நீங்கற் பொருட்டுச் சிவன் உருத்திரனாய்ச் சருவசங்காரம் செய்து, இறந்தவர் என்புகளை மாலையாகத் தொடுத்தும், பிரமன் திருமாலாகிய இவர்தம் தலைகளை மாலையாகத் தொடுத்தும் அணிந்து கொள்வர் என்பது புராண வரலாறு. பின்அவர்களைப் படைக்கிறபோது, களைப்பு நீங்கி ஊக்கத்துடன் பிரமன் படைப்புத் தொழிலையும் திருமால் காத்தற்றொழிலையும் செய்வன் என்பதாம். சோலை யென்பதற்குத் தண்டலை என்றும் பெயர்; அதனால், தொடுக்கப்படுவது தண்ணிய தலைமாலை என்பதாம். அதனால்தான் “சோலையே நாம் தொடுப்பது என” மொழிந்து, நங்கையைப் பார்த்து முறுவலித்து “ஏலமுறுவல் புரிகின்றார்” என வுரைப்பாளாயினள்.
தேவரீர் அணியும் மாலை யாது என்று வினவிய நங்கைக்குத் தலைமாலை என விடை கூறியவாறு. (48)
|