182.

    கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால்
        கலுழ்கின்றே னின்றிருக் கருணை
    அடையே னவமே திரிகின்றேன்
        அந்தோ சிறிது மறிவில்லேன்
    வி்டையே றீசன் புயம் படுமுன்
        விரைத்தாட் கமலம் பெறுவேனோ
    கொடையே ரருளைத் தருமுகிலே
        கோவே தணிகைக் குலமணியே.

உரை:

     தணிகை மலையில் எழுந்தருளும் உயர்ந்த மணி போல்பவனே, கொடைப் பொருளாகத் திருவருளைப் பொழியும் மேகமே, தலைவனே, கடையனாகிய யான் வஞ்சம் நிறைந்த மனமுடையனாய்க் கண் கலங்கி வருந்துவேனாக, உனது திருவுடைய கருணை பெறாது வீண் பொழுது போக்கித் திரிகின்றேன்; ஐயோ, என்பால் சிறிதும் நல்லறிவில்லை; எருதேரும் இறைவனாகிய சிவபிரான் தோள் மேல் இருக்கும் நறுமணமுடைய தாமரைப் பூப்போலும் உன் திருவடியை அடைகுவேனோ, உரைத்தருள்க, எ. று.

     மணி பிறக்கும் இடமாகலின் தணிகை முருகனைத் “தணிகைக் குலமணியே” என்று கூறுகின்றார். “மலையிடைப் பிறவா மணியே யென்கோ” (சிலப் : 2 : 77) என்பது காண்க. குலம் - உயர்வு. திருவருள், “கொடைக்குரி மரபின்” பொருள் அன்றாயினும், கொடைப் பொருள் போல வரையாது வழங்குமாறு விளங்கக் “கொடையேர் அருளைத் தருமுகிலே” எனப் புகல்கின்றார். முகில் - மழை மேகம். உலகுயிர்த் தொகுதியை முறை செய்து காப்பாற்றும் தொழிலுடைய னாதலால் “கோவே” எனல் வேண்டிற்று. கீழ் மக்கள் நெஞ்சம் வஞ்சனை பொய் முதலியன நிறைந்திருத்தலை நினைந்து “கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன்” எனவும், நெஞ்சகத்தின் தீமை நின் திருவருட்கு என்னை இலக்காக்காமையால் யான் வீண்பட்டு அலைகின்றேன் என்பாராய், “நின் திருக் கருணை யடையேன் அவமே திரிகின்றேன்” எனவும், இந்நிலைமை நினைவில் எழும் போது அவலம் பெருகுதலால், “அந்தோ” எனவும், அவலத்தின்கண் அறிவின்மை புலப்படுதலால் “சிறிதும் அறிவில்லேன்” எனவும், அறிவின்மை மனத்தில் தூய்மை யில்லாமை ஆகியவை காரணமாக இறைவன் திருவடியைப் பெறுதல் இயலா தென்று உணரப்படுதலால் கையற வுற்று, “உன் விரைத்தாட் கமலம் பெறுவேனோ” எனவும் இசைக்கின்றார். முருகன் திருவடியை நினைந்த போது, அப்பெருமான் சிறு குழவி வடிவில் சிவபிரான் தோள் மேலிருந்து மகிழும் காட்சி நினைவுக்கு வந்தமையின் “விடை யேறீசன் புயம்படும் நின் விரைத் தாட்கமலம்” என்று உவந்து புகழ்கின்றார். “காலனை வென்றவன் தோளில் உலாவிய காலா தாலேலோ” (போரூர்ச்சன்) என்று சிதம்பர சுவாமிகள் கூறுவது நினைந்து இன்புறத்தக்கது.

     இதனால், திருவடிப் பேறு நினைந்து இறைஞ்சிய வாறாம்.

     (2)