1820. உயிரு ளுறைவீர் திருவொற்றி
யுடையீர் நீரென் மேற்பிடித்த
வயிர மதனை விடுமென்றேன்
வயிரி யலநீ மாதேயாஞ்
செயிர தகற்றுன் முலையிடங்கொள்
செல்வ னலகாண் டெளியென்றே
யியல்கொண் முறுவல் புரிகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ; சேடி, உயிர்கட்குயிராய் உள்ளுறையும் திருவொற்றியூரை இடமாக வுடையவரே, நீவிர் என்மேல் கொண்ட வயிரத்தை விடுதல் வேண்டும் என்று வேண்டினேன்; அவர் என்னைப் பார்த்து, மாதே, நீ எனக்குப் பகையில்லை; யாமும் பகைக்கேதுவாகிய துன்பத்தை யகற்றும் போகச் செல்வனாகிய இந்திரனல்ல; இதனைத் தெளியவுணர்க என்று சொல்லி, அழகிய புன்முறுவல் செய்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
உயிர்களோடு உடனாகும் இயைபினால், சிவன் ஆன்மாக்களிடத்தே உயிர்க்குயிராய் இருத்தல்பற்றி, “உயிருள் உறைவீர்” என்றும், வேறாகும் இயைபினால் திருவொற்றியூரிடத்தே அதனையுடைய தலைவனாய் இருத்தல் தோன்ற, “திருவொற்றியுடையீர்” என்றும் கூறுகின்றாள். வயிரம் - பகையுணர்வு. பிச்சைத் தேவரது பார்வையில் வேண்டற் குறிப்புக் காணப்படாமையால், “நீர் என்மேற் பிடித்த வயிரம் அதனை விடும்” என்று பலியிடும் நங்கை கூறுகின்றாள். அதற்கு அவர் “நீ எனக்குப் பகையல்ல; அதனால் எனக்கு உன்பால் வயிரம் கொள்ள இடமில்லை” என்றும், வயிரப் படையையுடைய இந்திரனும் யாம் அல்ல என்பாராய், “மாதே நீ வயிரி அல; யாமும் செயிர தகற்றும் முலையிடங் கொள் செல்வன் அல காண், தெளி” என்றும் முறுவல் செய்கின்றார் என்று உரைக்கின்றாள். வயிரி; வயிரம் உடையவர் வயிரி. வயிரம் என்பது வச்சிரப் படைக்கும் பெயராதலால், அதனையுடைய இந்திரனுக்கும் வயிரி என்று பெயருண்டு. தேவமகளிரின் போகம் நுகர்பவனானது கொண்டு, இந்திரனை மகளிர் முலையிடங்கொள் செல்வன் என்பர். நான் மகளிர் முலைப்போகத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்திரன் அல்ல என்றற்கு, “யாம் உன் முலையிடம்கொள் செல்வன் அல, காண்” என்றும், எனதுரை உண்மையெனத் தெளிக என்பாராய், “தெளி” என்றும், தெரிவிக்கின்றார். காம வேட்கையாகிய துன்பம் நீக்குவதுபற்றி, “செயிர்அது அகற்றும் முலை” என்று குறிக்கின்றார். அது: பகுதிப் பொருள் விகுதி. அறுவகைக் குற்றங்களில் ஒன்றாதலின், காமவேட்கையைச் செயிர் என்று இசைக்கின்றார். முலையிடங்கொள் செல்வன் என்றது முலையிடத்தே தங்கும் வீற்றுத் தெய்வம் என்றுமாம் (சீவக. 171. உரை) எம்மை அறியாது மருளுகின்றாய் என்ற கருத்துப்பட முறுவலித்தமையின், “இயல் கொள் முறுவல்” என இயம்புகின்றாள்.
வயிரம் விடும் என்றாட்கு நீ வயிரியல்ல. வயிரப் படையேந்தும் இந்திரனும் நானல்ல; மருண்டு பேசுகின்றாய் என முறுவலித்து மொழிந்தாராயிற்று. (49)
|