1821.

     தண்கா வளஞ்சூழ் திருவொற்றித்
          தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
     யென்கார் முகமாப் பொன்னென்றே
          னிடையிட் டறித லரிதென்றார்
     மண்கா தலிக்கு மாடென்றேன்
          மதிக்குங் கணைவி லன்றென்றே
     யெண்கா ணகைசெய் தருள்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; தண்ணிய சோலைகளும் பல்வகை வளங்களும் சூழ்ந்த திருவொற்றியூரிலுள்ள தலைவராகிய இவரை நோக்கி, 'சாமி, உமது கையில் ஏந்தப்பட்ட வில் மாபெரும் பொன்னாகும் என்று சொன்னேன்; அது கேட்ட அவர், ஆம்; அது பொன்னேயாயினும் எடை போட்டு மாற்றறிவது ஆகாத செயலாகும் என்று சொன்னார்; என்றாலும் மண்ணகத்து மக்களால் அப்பொன் மிகவும் காதலித்துப் பேணப்படும் பொருளாம் என்று நான் சொன்னேனாக, நீ சொல்லும் மாடு வில்லுக்கு அம்பாகுமேயன்றி வில்லாகாது என்று சொல்லி என்னைப் பார்த்து நகைக்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     தண்ணிய கா எனச் சிறப்பித்தமையின், வளமென்பது பல்வகை வளம் எனச் சிறப்பித்துரைக்கப்பட்டது. சாமி - தலைவர். “தானேறு அனையான் உளன் சீவக சாமி என்பான்” (சீவக. 7) என்று பிறரும் கூறுவது காண்க. முப்புரத் தசுரரை ஈடழித்தற்காகப் பொன்மலை வில்லாக வளைக்கப்பட்டமைபற்றி, நும்கை கார்முகம் என்னாமல், நும்கை எண் கார்முகம் என்றும், அதன் பொன் மிக்க பெருமையும் மதிப்பும் வாய்ந்த தென்பாளாய் “மாப்பொன்” என்றும் கூறினாள். கார்முகம் - வில். மா என்பது பெருமையும், பொன்னை நிறுக்கும் அளவைகளான கழஞ்சு, தொடி, பலம், மா, கா என்பவற்றுள் மாவும் குறித்தல் பற்றி, பலிவேண்டி வந்த பிச்சைத் தேவர், “இடையிட்டறிதல் அரிது” என்றார். எடை என்பது நேரிதாயினும், இடையென்பது நாட்டுமக்கள் வழக்கு என அறிக. பொன்னுக்கு மாடு என்பதும் பெயராதல்பற்றி, எடையிட்டு மாற்றுக் காண்டல் அரிதாயினும் மாடு மண்ணகத்து மக்களால் காதலித்துப் போற்றப்படுவது என்பேனாய், “மண் காதலிக்கும் மாடு என்றேன்” என்று சொன்னாள் பலியிடும் நங்கை. மாடு என்பது எருதையும் குறிக்கும். அதனைக் கருத்திற்கொண்டு நீ சொல்லும் மாடாகிய எருது எமக்கு ஊர்தியான திருமாலாகிய; அந்த எருது எமது மலைவில்லுக்கு அம்பானது உண்டேயன்றி, வில்லானதில்லை என்பாராய், “மதிக்கும் கணை, வில்லன்று” என்று சொல்லி, இப்பொருளை யறியாளாய் மருண்டு நோக்கியது பற்றித் தேவர் நகைத்தமையின், “என்காண் நகைசெய்தருள்கின்றார்” என்று சொல்லி வியக்கின்றாள்.

     கார்முகம் பொன்னென்றாட்கு, அது எடையிட்டறிதல் அரிது என்று தேவர் விடை கூறவும், பொன்னாகிய மாட்டை மண்ணவர் காதலிக்கின்றனர் என்று அவள் சொன்னாளாக, மாடு அம்பானதுண்டேயன்றி வில்லானதில்லை எனக் கூறி, அவளது அறியாமையை வெளிப்படுத்தி நகை செய்தவாறு.

     (50)