1822. செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர்
திருமான் முதன்முத் தேவர்கட்கு
மைகா ணீரென் றேனிதன்மே
லணங்கே நீயே ழடைதியென்றார்
மெய்கா ணதுதா னென்னென்றேன்
விளக்குஞ் சுட்டுப் பெயரென்றே
யெய்கா ணுறவே நகைக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ..
உரை: ஏடீ, சேடி; வயல்களிடத்தே விளையும் பல்வகை வளஞ் சூழ்ந்த திருவொற்றியூர்க்கண் உள்ள தேவரீர், திருமால் முதலிய தேவர் மூவர்க்கும் நீர் தலைவர்காண் என்றேனாக. பெண்ணே, நீ ஐமேல் ஏழ் அடைவாய் என்றார்; நீர் சொல்வது மெய்தான்; அது யாது என்று வினவினேன்; அது நூல்களில் விளங்கும் சுட்டுப்பெயர் என்று சொல்லி எனக்கு அயர்வுண்டாமாறு நகைக்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
செய் - வயல்; நன்செய், புன்செய் என்றாற்போல, உழுது வித்தி விளைவு காண்டற் பொருட்டுப் பகுக்கப்படும் நிலக்கூறு செய் எனப்படும். செய்களின் வாயிலாக விளைவும் வளமும் நிகழ்தலால், “செய்காண் வளம்” என்று தெரிவிக்கின்றார். திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவர்க்கும் சிவன் தலைவன்; அதனால் திருமால் முதல் முத்தேவர்க்கும், ஐ - தலைவன். “என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்னை முன்னின்று கன்னின்றவர்” (குறள்) என்பது காண்க. அணங்கு - பெண். ஐமேல் ஏழ் அடைய, ஏழ் ஐ என்று நின்று ஏழையாகிறது. நீ ஏழையாவாய் என்பது, பேதைமைப் பண்புடைமை பற்றிப் பெண்களை ஏழை என்பது மரபு. மேல் ஏழ் அடையும் ஐ என்பது இனிது விளங்காமையால் “அதுதான் என்” என்று பலியிடும் நங்கை கேட்கின்றாள். தமிழ் இலக்கண நூல்கள் அது என்பது சுட்டுப் பெயர் என்று கூறுதலால், தேவர் அதனைக் கருத்திற் கொண்டு, யார்க்கும் இனிது தெரிய நிற்கும் சுட்டுப் பெயரன்றோ என்பாராய், “விளங்கும் சுட்டுப் பெயர்” என்று சொல்லி, ஏமாற்றத்தால் வெள்கி நின்றமைபற்றி நங்கையை “எய்காணுற நகைக்கின்றார்” எனக் கொள்க. எய் காண்டல் - தளர்வுறல். எள்ளல் - நகை. நகைக்கப்பட்டாரை மெலிவு செய்தல் தோன்ற “எய்காணுற” என்கின்றார் என்க.
இப்பாட்டில், தேவர் மூவர்க்கும் ஐயன்றோ என்றாட்குத் தேவர் அவட்கு நீ ஏழ் ஐ என்று சொல்லி இகழ்ந்தாராக, நங்கை தெளியாது அது யாது என வினவ, அது சுட்டுப பெயரென்று சொல்லி ஏமாற்றி நகைத்தவாறு. (51)
|