1823. விண்டு வணங்கு மொற்றியுளீர்
மென்பூ விருந்தும் வன்பூவில்
வண்டு விழுந்த தென்றேனெம்
மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன்
றோகாய் நாமே தொண்டனென
வெண்டங் குறவே நகைக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; திருமால் வழிபட்டு வணங்கும் திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, மெல்லியப் பூப்போன்ற கைகளினின்றும் வளைகள் கழன்று வளவிய நிலத்தின் மேல் வீழ்ந்தொழிந்ததே என்று சொன்னேனாக, மலர் போன்ற கையில் சங்கேந்தும் எமக்குரிய திருமாலும் நிலத்தில் வீழ்ந்து கிடக்கின்றார் காண் என்று சொல்லுகின்றார். நீவிர் தொண்டராகிய நம்பியாரூரர் பொருட்டுத் தூது சென்று மிக்க அருள் புரிந்தீரன்றோ என்று கேட்டேன்: மயில் போன்றவளே, நானே அடியார்க்குத் தொண்டு செய்யும் தொண்டன் என்று மனத்தில் மறவாவாறு நகைத்தருளுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
விண்டு - திருமால். எல்லாச் சிவன் கோயில்களிலும் திருமாலுக்குச் சந்நிதி யுண்டாகையால், விண்டு வணங்கும் ஒற்றியுளீர் என்று குறக்கின்றாள், பலியிடும் நங்கை. பிச்சைத் தேவரைக் கண்ட நங்கைக்கு உள்ளத்தே அவர் பொருட்டுளதாகிய இச்சையால் கைவளை கழன்று நிலத்தில் விழுவதறிந்து, “மென்பூ விருந்தும் வண்பூவில் வண்டு விழுந்தது” என்று சொல்லுகிறாள். மென்பூ - மென்மையான பூப்போன்ற கை. வண்பூ என்றது வளமான பூமியாகிய நிலத்தை. வண்டு - கைவளை. உன் கைவளை மாத்திரமன்று, எமக்குரிய திருமாலாகிய வண்டும் நிலத்தில் கிடந்து தல சயனம் பெறுகின்றது என்பாராய், “எம் மலர்க்கை வண்டும் விழுந்த” தென்று சொல்லுகின்றார். மலர் போன்ற கையில் சங்கேந்தும் திருமாலை “மலர்க்கை வண்டு” என்று குறிக்கின்றார். வண்டு - சங்கு. மாமல்லபுரத்தில் கிடந்த கோலத்தில் காட்சிதரும் பெருமாள் கோயில் தலசயனம் எனப்படுகிறது. கடற்கரை ஆற்றங்கரைகளிற் பள்ளி கொண்ட கோலத்துத் திருமால் கோயில்கள் 'சலசயனம்' என்று கூறப்படும். திருவாரூரில் பரவையார் பொருட்டும் திருவொற்றியூரில் சங்கிலியார் பொருட்டும் சிவன் நம்பியாரூரருக்காகத் தூது சென்றதை நினைப்பிக்கும் முறையில் “தொண்டர்க்குத் தொண்டு செய்வதே எனக்குத்தொழில்” என்பாராய் “தோகாய், நாமே தொண்டுடன்” என்று சொல்லுகின்றார். தொண்டன் - அன்பர்க்குத் தொண்டு புரிபவன். எண்ணுகின்ற மனத்தின்கண் என்றும் அருள்நகை புரிவது குறித்து, “எண்தங்குறவே நகைக்கின்றார்” என மொழிகின்றாள். தொண்டர்க்கு மிக அருள்வீர் என்றவிடத்து. தொண்டர் வன்றொண்டரான நம்பியாரூரர்க்குப் பொருந்துமாறு அறிக, தொண்டரையல்லது வேறு துணையிலானாகலின் சிவனுக்குத் தொண்டன் என்பதோர் சிறப்புப் பெயர்உண்டு எனக் கொள்க. “தொண்டலால் துணையுமில்லை தோலலா துடையுமில்லை” (ஐயா) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க.
இப்பாட்டில், பலியிட்ட நங்கை இச்சைமிகுதி தெரிவிக்கக் கருதி மென்பூப் போன்ற கையிலிந்த வளை நிலத்தில் வீழ்ந்த தென்று தெரிவிக்க, அவள் கருத்தை மாற்றற்கு எம்மலர்க்கை வண்டும் விழுந்த தென்றார்; தொண்டர்க்கு மிக அருள்வீர் என்று குறிப்பாய்த் தனக்கு அருள் செய்ய வேண்டுமென்றாளாக, அவட்கு நாமே தொண்டன் என மொழிந்து அவளது மன வேட்கையைத் திருத்தியவாறு காண்க. (52)
|