1824.

     மட்டார் மலர்க்கா வொற்றியுளீர்
          மதிக்குங் கலைமேல் விழுமென்றே
     னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா
          மிசைத்தே மென்றா ரெட்டாக
     வுட்டா வுறுமவ் வெழுத்தறிய
          வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க்
     கிட்டார் நாம மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; தேன் சொரியும் மலர்கள் நிறைந்த சோலைகளை யுடைய திருவொற்றியூரிலுள்ள பிச்சைத் தேவரே, போர்வையாக மதித்து மேலிட்டிருக்கும் ஆடை மேலே விழுகிற தென்று சொன்னேனாக, நான் எட்டாம் எழுத்தை எடுத்துச் சொன்னேன் என்று சொல்லுகின்றார்; எட்டாகும் எழுத்தாக உள்ளத்தே சென்று பொருந்தும் அவ்வெழுத்தை இனிது அறிய உரைப்பீராக என்று கேட்டேனாக, அஃது அந்தணர் வாழும் ஊர்க்கு இடும் பெயர் என்று உரைக்கின்றார். இது தான் என்னையோ. எ.று.

     மட்டு - தேன். மலர்ச்சோலை, மலர்க்கா எனப்படுகிறது. ஒற்றியுளீர் - ஒற்றி நகர்க்கண் உள்ளவரே; ஒற்றி (சிறிது விலகி) யிருத்தலை எண்ணாமலே அருகில் வருகின்றீர்; அதனால் மேலாடை என் மேற்படுகிறது என்ற பொருள்பட, “ஒற்றியுளீர் மதிக்கும் கலைமேல் விழும்” என்றாளாம். ஒற்றியூரிலுள்ளவரே, உமது காட்சியால், நெகிழாவாறு எண்ணிப் பூண்டிருக்கும் எனது உடை நெகிழ்ந்து கீழே வீழ்கிறதுகாண் என்றாளாகக் கூறுவது ஒன்று; சந்திரனாகிய மதிக்கும் கலை குறைவதுண்டு காண், அதுபோல் மதித்துடுக்கும் கலையும் நெகிழ்ந்து வீழ்வதுண்டு; அதனால் யாம் சிறிது விலகியிருப்பது நன்று என்ற கருத்துப்பட மொழிந்தவாறாம். ஆம்; நீ குறிப்பாய் மொழிவதற்கொப்ப, உடை அவிழும் என்றற்கு “எட்டாம் எழுத்தை எடுத்தது நாம் இசைத்தோம்” என்றார். எட்டாம் எழுத்து, தமிழ் எழுத்துக்களுள் எட்டென்னும் எண்ணாகும் எழுத்து 'அ' என்பது; அதனை எடுத்திசைப்பது கலை அவிழும் என முடிவது காண்க. இப்பொருள் பலியிட வந்த நங்கைக்கு இனிது விளங்காமையால், “எட்டாக உள் தாவுறும் அவ்வெழுத்து அறிய உரையீர்” என்று வினவுகின்றாள். தாவுறுதல் - வலியுறுதல். தா - வலி. பார்ப்பார் மிக்குறையும் ஊர்களை அகரம் என்று பண்டையோர் வழங்கினர். அகரம் - அ என்னும எழுத்து.

     இப்பாட்டில், கலை மேல் விழும் என்றாட்கு, இறுகவுடுத்தும் அவிழும் என்று விடையிறுக்கின்றார் என அறிக.

     (53)