1825. ஒற்றி நகரீர் மனவசிதா
னுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
பற்றி யிறுதி தொடங்கியது
பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
மற்றி துணர்கி லேனென்றேன்
வருந்தே லுள்ள வன்மையெலா
மெற்றி லுணர்தி யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; ஒற்றிநகர்க்கண் உறையும் தேவரீர், மனவசியுடையார்க்குத்தான் நீவிர் திருவருள் ஞானம் நல்குகின்றீர் என்று சொன்னேனாக, அதனை இறுகப் பற்றி இறுதி யெழுத்தில் தொடங்கி ஓதுபவர்க்கே அருளப் படுகிறது என்று உரைத்தார்; அது தெளிவாகப் புலப்படாமையால், இதனை என்னால் உணர முடியவில்லை என்று மொழிந்தேன்; வருந்தாதே, மனத்தின்கண் உள்ளவன்மை போக்கி அன்பாற்குழைந்து எண்ணுவாயாக என்று கூறுகின்றார்; இதுதான் என்னையோ, எ.று.
மனவசி - மனத்தக்கது அன்பு. வசி என்னும் சொல்லுக்கு வாஞ்சிக்கப்படுதல் என்பர் மறைஞான சம்பந்தர் (சிவதரு). எவ்வுயிர்க்கும் அன்புடையார்க்கே ஈசன்பால் அன்புண்டாகும்; அந்த அன்பு சிவ ஞானத்துக் கேதுவாதலால் “மனவசிதான் உடையார்க் கருள்வீர்” என்று சொன்னாள். மனவசி என்றதை, இறுதிமுதலாக வைத்துச் சிவநம என மாற்றிச் சிவயநம எனக் கொண்டு ஓதிப் பயில்பவருக்குத் திருவருள் ஞானம் நல்கப்படும் என்பாராய், “இறுதி தொடங்கிப் பயிலுமவர்க்கே அருள்வது” என்று கூறுகின்றார். அது, மனவசி என்பது. திருவைந்தெழுத்தைச் சிவயநம எனச் சிகரத்தை முதலாக வைத்து ஓதுக என்பது விதி. அதனால் தான் இறுதி தொடங்கிப் பயிலுவது வற்புறுத்தப்படுகிறது. “நம முதலா ஓதில் அருள் நாடாது, நாடும் அருள் சிம்முதலா ஓது நீ சென்று” (உண். விளக். 42) என்று திருவதிகை மனவாசகம் கடந்தார் அறிவுறுத்துவது காண்க. மனவன்மை - நான் செய்தேன், எனது பொருள் என்ற உணர்வு காரணமாகப் பிறக்கும் தடிப்பு (தற்போதம்). அது நீங்கி, “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்னும் உணர்வால் அகம் குழைதல் ஏற்படுமாயின், அருள் ஞானம் தலைப்படும் என்று உணர்த்தற்கு, “வன்மை எலாம் எற்றில் உணர்தி” என உரைக்கின்றார்.
இப்பாட்டில், 'மனவசியுடையார்க்கு அருள்ஞானம் அருளப்படும்' என்றாட்கு, 'அற்றன்று, அதனை மாற்றிச் சிவயநம எனப் பயில்வார்க்கு அருளப்படும்' என்றும், தற்போதம் நீக்கி அன்பாற் குழைந்து பயிலுமிடத்துத் திருவருள் உணர்வு இனிது எய்தும் என்றும் உரைத்தாராயிற்று. (54)
|