1826.

     வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர்
          வருந்தா தணைவே னோவென்றே
     னூன்றோ யுடற்கென் றார்தெரிய
          வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
     சான்றோ ருமது மரபோர்ந்து
          தரித்த பெயர்க்குத் தகாதென்றே
     யேன்றோர் மொழிதந் தருள்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ளவரே, வருத்தமின்றி உம்மை யடைவேனோ என்று வினவினேனாக, வேறு கருதிக்கொண்டு ஊன் வளம் பெற்று உடற்கு ஆம் என்று சொன்னார்; அவரது சொல்லில் விளக்கமின்மையின் தெரிய வுரைப்பீர் என்று கேட்டேன்; அதற்கு அவர், உமது இனத்தின் இயல்பை யெண்ணிச் சான்றோர் உமக்கு இட்ட பெயர்க்கு அது தக்க தன்றாம் என இயைந்ததொரு மொழியை எடுத்துரைக்கின்றார்; இது தான் என்னயோ. எ.று.

     வானளாவ உயர்ந்து வளர்ந்த மரம் நிறைந்த சோலை என்பது புலப்பட, “வான்தோய் பொழில்” என்று புகல்கின்றார். வருந்தாது அணைவேனோ என்றதை வரும் தாது அணைவேனோ எனப் பிரித்து, பல்வகை அணியுருவில் வரும் பொன்னைப் பெறுவேனோ என்று வினவியதாகக் கொண்டு, ஊனால் வளம் பெற்ற உன் உடற்கு வரும் அப்பொன்னிழைகள் பொருந்துவனவாம் என்பாராய், “ஊன்றோய் உடற்கு” என்று தேவர் உரைக்கின்றார். தாது, அணைவு ஏனோ என்று கேட்டதாகக் கொண்டு, மக்கள் உடம்பில் தாது வளமுறச் சேர்தற்குக் காரணம் ஊன் கலந்த உடம்புகளைத் தோற்றுவித்தற் கென்றதாக உரைத்தலும் ஒன்று. உடலில் தாது வளமில்லாதார்க்கு மக்கட்பேறு உண்டாகாதென அறிக. ஊன்தோய் உடம்புகளைத் தோற்றுவித்தல், உயிர்கள் உடலில் தங்கி உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து மலமாசு நீங்கி ஞான மெய்தி வீடு பேறெய்தும் பொருட்டு; இவற்றின் விளக்கம் ஞான நூல்களில் காணப்படும். ஞானத்தை மகளிர்க்கு உரைத்தலாகாது என்பர்; அக்கருத்தால் “உமக்குத் தகாது” என்றும் கூறுகின்றார். ஊன் கரைந்து என்பெழுந்து உலகறிய யாக்கைக்கு எத்தகைய பொன்னணியும் பொற்பளிக்காதாதலால் “ஊன்றோய் உடற்கு” என்று சிறப்பித்துரைத்தார். வருந்தாது என்பதற்கு அவர் வேறு பொருள் கொண்டமை தெரியாமையால், “தெரிய உரைப்பீர்” என்று பலியிடும் நங்கை புகன்றது, மாற்றுயர்ந்த பொன்னென்று தெரிய உரைத்துக் காட்டுமின் என்று சொன்னதாகக் கொண்டு, உமது உடலிடத்துக் காணப்படும் திதலை பொன்னுரை போல்வதேயன்றி உரைக்க உளதாவதன்று; “பொன்னுரை கடுக்கும் திதலையர்” (முருகு. 145) மேலும், பெண்ணென்று பெயர் படைத்த உன்னிடத்தில் யாம் கட்டளை பெறுவது பொருந்தாது என்றும், மெல்லியலாராகிய உம்மைக் கல்லின் இயல்பினராகக் கொண்டு உரை காண்பது தகாது என்றும் கூறலுற்று, “ஓ இதுதான் சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்குத் தகாது என்று ஓர் மொழி தந்தருள்கின்றார்” என்று இயம்புகின்றாள். மரபு, இங்கே இயல்பு குறித்து நிற்கிறது. பெண்ணென்ற பெயருடைய நின்பாற் கட்டளை பெறுவது பெண்ணேவல் செய்வதாய தகுதியின்மையை எமக்கு உண்டாக்கும்; அது தகாது எனவும், மெல்லியல் என்ற காரணப் பெயர் பெற்ற உன்னுடைய உடலிற் பொன்னுக்குரைகாண்பது என்போன்றார்க்குத் தகுதியாகாது எனவும் பொருள்படுமாறு நிற்பது பற்றி, இது சான்றோர் செயற்கு மாறுபடுவதென்று சொல்லி யமையாமையால், “தகாது” என்றது பற்றி, “தகாது என்று ஏன்றோர் மொழி தந்தருள்கின்றார்” என்று மொழிகின்றாள்.

     இப்பாட்டில் வருந்தாது அணைவேனோ என்றாட்குத் தாது என்னும் பொன்னைக் குறிப்பதாகக் கொண்டு, பொன்னிழை வளவிய உடற்கு அமையும் என்னவும் அவள் உரைப்பீர் என்றது பொன்னுரை காட்ட வேண்டியதாகக் கொண்டு உரையாடுதல் காண்க.

     (55)