1827.

     தீது தவிர்க்கு மொற்றியுளீர்
          செல்ல லறுப்ப தென்றென்றே
     னீது நமக்குத் தெரிந்ததென்றா
          ரிறையா மோவிங் கிதுவென்றே
     னோது மடியார் மனக்கங்கு
          லோட்டு நாமே யுணரன்றி
     யேது மிறையன் றென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ..

உரை:

     ஏடீ, சேடி; தன்னை யடைந்தாரது துன்பத்தைப் போக்கும் திருவொற்றியூரில் உள்ள பிச்சைத் தேவரே, எமக்குண்டாகும் வருத்தத்தை நீக்குவது எப்போது என்று வினவினேனாக, இது நமக்குத் தெரிந்தது தானே என்று சொன்னார்; இங்கே இப்போது நீவிர் உரைக்கும் இது எனது வினாவுக்கு விடையாகுமோ? என்று கேட்டேன்; எமது திருப்பெயரை ஓதும் அடியவர் மனத்திற் படியும் அறியாமை யிருளைப் போக்கும் இறை நாமே என்று உணர்க; எம்மை யன்றி வேறு யாரும் யாதும் இறையாவதில்லை என்று அறிவிக்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

      தனது திருமுன் அடைந்து வணங்கி வழிபடுவர் அனைவரும் யாதானுமோர் துன்புற்று அதற்குத் தீர்வு காண்பது நோக்கமாக வருதலால், அவர்க்கு வேண்டும் அறிவும் தெளிவும் தந்து தீர்வு பெறுவித்தற் கென்றே சிவன் ஆங்காங்குக் கோயில் கொள்ளுகிற முறையில் திருவொற்றியூர் அமைந்தமைபற்றித் “தீது தவிர்க்கும் ஒற்றியுளீர்” என்று சொல்கின்றாள். எமக்குற்ற துன்பத்தை நீக்குவது எப்போது என்ற கருத்துட் கொண்டு பலியிட வந்த நங்கை, “செல்லல் அறுப்பது என்று” கேட்டாளாக, அவள் கூற்றைச் செல் அல் அறுப்பது என்று பிரித்து நாளும் மாறிச் செல்லுகின்ற இருளை நீக்குவது ஞாயிறன்றோ என்று கேட்டதாகக் கொண்டு, இது நமக்கெல்லாம் தெரிந்ததுதானே என்பாராய், “ஈது நமக்குத் தெரிந்தது” என்று பிச்சைத் தேவர் கூறினார். இது என் வினாவுக்கு ஏற்ற விடையன்று என்பாளாய், “இறையாமோ இங்கு இது” என்று கூறுகின்றாள். அவள் கூற்றில் “இது” என்றது ஞாயிற்றை எனக் கொண்டு, ஞாயிறு இறைவனாகுமோ என்று கேட்டதாகக் கொண்டு, இறையாவது ஞாயிறன்று அடியவர் மனத்திருளைப் போக்கி ஞானமுணர்த்தும் நாமே இறை; வேறு யாதும் அன்று என்பாராய், “ஓதும் அடியார் மனக்கங்குல் ஒட்டும் நாமே யுணர்; ஏதும் இறையன்று” என்கின்றார். திருப்பெயரை ஓதுவதும், திருவைந்தெழுத்தை ஓதுவதும் அடியார் செய்வனவாதலால், “ஓதும் அடியார்” என்றும், இருளாய வுள்ளத்தின் இருளை நீக்கி இடர்பாவம் கெடுத் தேழை யேனை யுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல், சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை” (புள்ளிருக்கு) என்று திருநாவுக்கரசர் உரைத்தலால், “மனக்கங்குல் ஓட்டும் நாமேயன்றி ஏதும் இறையன்று” என்றும் உரைக்கின்றார்.

     (56)