1828. ஒண்கை மழுவோ டனலுடையீ
ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
வண்கை யொருமை நாதரென்றேன்
வண்கைப் பன்மை நாதரென்றா
ரெண்க ணடங்கா வதிசயங்கா
ணென்றேன் பொருளன் றிவையதற்கென்
றெண்சொன் மணிதந் தருள்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; ஒள்ளிய தனது கையில் மழுவாட்படையும் அனலும் உடையராய்த் திருவொற்றியூரில் வாழ்கின்ற உத்தமராகிய நீவிர் வளவிய வரம் வழங்குவதொரு கையையுடைய நாதராவீர் என்று நான் சொன்னேன்; வண்கை ஒன்றல்ல பலவுடைய யாம் பலகை நாதர் என்று அவர் சொன்னார்; உமது சொல் மனத்தில் அடங்காத அதிசமாய் இருக்கிறது என யான் உரைத்தேனாக, அதற்கு இவை பொருளல்ல வென்று மொழிந்து, எண்ணியெண்ணி மகிழத் தக்க சொல்லாகிய மணிகளைத் தருகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
ஒரு கையில் மழுப்படையும் ஒரு கையில் அனலும் ஏந்துவது பற்றி, “ஒண்கை மழுவொடு அனல் உடையீர்” என்கின்றாள். மழு - கோடரி, பரசு என்றும் கூறுவர். அருள் வழங்குதற்கொரு கையும் அடிக்கீழ்ப் புகலளித்தற்கொரு கையும் உடைய ரென்பது புலப்பட, “வண்கை ஒருமை நாதர்” என்று நங்கை சொல்லுகின்றாள். ஒருமை - ஒன்றென்னும் எண்ணின் மேற்று. திருவொற்றியூர் இறைவனுக்குத் தியாகர், படம் பக்கநாதர், எழுத்தறியும் பெருமான், பலகை நாதர் எனப் பலப்பெயர்கள் உண்டு. அவற்றுள் பலகை நாதர் என்பதை, “வண்கைப் பன்மை நாதர்” என்று கூறுகின்றாள். வள்ளலெனப்படுவோர் அனைவரும் வண்கை யொன்று கொண்டுதான் இரப்போரது இன்மையைப் போக்கினர். தாங்கள் பல கைகளைக் கொண்டு கொடைக்கு நாதரானது மிக்க வியப்பைத் தருகிறது என்பாளாய், “எண்கன் அடங்கா அதிசயம் காண்” என்று சொல்லுகின்றாள். அது, அதிசய மன்றெனப் பொருள் பட நிற்பது கண்டு, பலகை நாதர் என்ற அப்பெயர்க்கு நீ கருதும் பொருள் இவையன்று; கேடயப் பலகையேந்திப் பல போர்களில் வெற்றி கண்டவர் என்பது பொருள் எனவும், அதிசயம் என்று நீ சொன்ன சொற்கு இவை பொருளன்று; பல போர்களில் மிக்க பல வெற்றிகண்டவர் என்பது பொருள் எனவும் பல்பொருள் உரைத்தமை நோக்கி, “எண்சொல் மணிதந் தருள்கின்றார்” என்று உரைக்கின்றாள்.
வண்கை ஒருமை நாதர் என்றாட்குப் பலகைநாதரென்று பொருள்பட வண்கைப் பன்மை நாதர் என்றாராக, எண்கண் அடங்கா அதிசயம் என அவள் கூற, அதற்கு அது பொருளன்றென அவர் கூறியவாறாம்.. (57)
|