1829. ஒருவ ரெனவா ழொற்றியுளீ
ருமக்கம் மனையுண் டோவென்றே
னிருவ ரொருபே ருடையவர்கா
ணென்றா ரென்னென்றே னெம்பேர்
மருவு மீறற் றயலகரம்
வயங்கு மிகர மானதென்றே
யிருவு மொழிதந் தருள்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஒருவர் என்ற சிறப்புற்று வாழ்கின்ற திருவொற்றியூர்க் கண் உள்ளவரே, உமக்கு மனைவியர் உண்டோ என்று கேட்டேன்; எனக்கு இருவர் உளர்; அவர்கட்குப் பெயர் ஒன்றே என்று சொன்னார்; அப் பெயர் யாது என்று வினவியதற்கு எமது பெயரிற் பொருந்திய ஈறுகெட்டு அயலுள்ள அகரம் இகரமானது என்று, கேட்கும் நெஞ்சில் நிலைபெற இருக்கும் விடை கூறுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
சிவனுக்குரிய பெயர்களில் ஒருவன் என்பது ஒன்று; “நீலமேனி வாலிழை பாகத்தொருவன்” (ஐங்) என்பர். “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” (அண்டப்) என்று மணிவாசகனார் கூறுவதும் காண்க. இக்கருத்தை யுட்கொண்டே, “ஒருவர் என வாழ் ஒற்றியுளீர்” என்று வள்ளலார் குறிக்கின்றார். மனை - மனைவி. அ - உலகறி சுட்டு. மனைவியர் இருவர்; அவர்கட்குப் பெயர் ஒன்று என்றற்கு “இருவர் ஒருபேர் உடையர் காண்” எனவுரைக்கின்றார். சங்கரன் என்பது சிவன் பெயர்களில் ஒன்று; அதன் ஈறற்றால் சங்கர என நிற்கும்; ரகரம் ஈற்றின் அயல் எழுத்து; அதன் மேல் உள்ள அகரம் இகரமாயின், சங்கரி என்றாகும். சங்கரி - உமாதேவிக்குப் பெயர்; சங்கரி என்பது சங்கு அரி எனப் பிரிந்து சங்கேந்தும் அரி என்றாகித் திருமாலுக்காகும்; திருமாலும் சிவனுக்கு மனைவியாகி ஐயப்பனைப் பெற்றாரென்பது நாடறிந்த கதை. திருநாவுக்கரசர், “அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” (ஐயா) என்பதும் காண்க. சங்கரி என்ற ஒரு பெயர், உமாதேவிக்கும் திருமாலுக்கும் பொருந்துவது கொண்டே, “எம்பேர் மருவும் ஈறற்று அயல் அகரம் வயங்கும் இகரமானது என்று இருவும் மொழி தந்தருள்கின்றார்” என நங்கை நவில்கின்றாள். இருவும் மொழி - மனத்தில் இருத்தப்படும் சொல்.
இப்பாட்டில், பலியிட நங்கை மனைவியருண்டோ என வினாவினாட்கு, இருவர் சங்கரி என்ற ஒரு பெயரே யுடையவர் என்று பிச்சைத்தேவர் விடை கூறியவாறு. (58)
|