1830. பேரா ரொற்றி யீரும்மைப்
பெற்றா ரெவரென் றேனவர்தம்
மேரார் பெயரின் முன்பினிரண்
டிரண்டா மெழுத்தா ரென்றாரென்
னேரா யுரைப்பீ ரென்றேனீ
நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென்
றேரா யுரைசெய் தருள்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; புகழ்பெற்ற திருவொற்றியூரில் இருக்கும் பிச்சைத்தேவரே, உம்மைப் பெற்றவர் யாவர் என்று கேட்டேனாக, நமது அழகிய பெயரின்கண் முன்னேயுள்ள இரண்டெழுத்தும் பின் இரண்டெழுத்துமாகப் பெற்றார் என்று சொன்னார்; எனக்கு நேராய் விளங்குமாறு சொல்லுவீராக என்று மேலும் யான் கேட்கவே, நீ நம்பால் அன்பு கொண்டு நெஞ்ச முருகினால், சொல்லுவோம் என்று மனத்தின்கண் எழுச்சியுண்டாக உரைக்கின்றார்; இது என்னையோ. எ.று
பேர் - புகழ். புகழப்படுவது பெயராதல் பற்றி புகழ் அவ்வாறு கூறப்படுகிறது. ஈன்றவர் யார் என்ற பொருளில், “உம்மைப் பெற்றார் யாவர்” எனப் பலியிடும் நங்கை வினவினாளாக, அவர் நமசிவய என்ற தமது பெயரின் முன்னிற்கும் நம என்ற இரண்டெழுத்துக்களையும் சிவயநம எனப் பின்னே நிற்கும் இரண்டெழுத்துக்களாகக் கொண்டு தமது நெஞ்சின் கண்ணே பெற்றவர் எம்மைத் தமக்கே பெற்றாராவர் என்பாராய், “நம் ஏரார் பெயரின் முன்பின் இரண்டு இரண்டா மெழுத்தார்.” என்று பிச்சைத் தேவர் உரைக்கின்றார். “நமச்சிவாய” என்பது சிவனது திருப்பெயர்; “நாதன் நாமம் நமச்சிவாய“ என ஞானசம்பந்தரும், “எந்தையார் திருநாமம் நமச்சிவாய” என்று நாவுக்கரசரும் உரைப்பது காண்க. சிவாயநம எனப் பெறுவது பெரும் பேறாதலின், உம்மைப் பெற்றார் எவர் என்ற வினாவுக்குச் சிவாயநம எனப் பெற்றார் என்று கூறுகின்றார். “நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்” என்று மணிக்கவாசகர் கூறுவது நோக்குக, சிவாயநம என்ற திருவைந்தெழுத்து நமச்சிவாய வென்னும் திருப்பெயர்க் கண்ண தென்பது பற்றி “நம் ஏரார் பெயர்” என எடுக்கின்றார். “துஞ்சும் போழ்து நின்னாமத் திருவெழுத் தஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே” எனத் திருநாவுக்கரசர் தெளிவிப்பது அறிக. இருவும் மொழி - இருத்தும் மொழி. ஐந்தெழுத்தால் சிவன் உரு அமைந்த தென்றலின், ஐந்தெழுத்தை அருளப் பெற்றவர், சிவனைப் பெற்றவராதலைச் சிவஞான போதம், சிவஞான சித்தியார் முதலிய நூல்கள் இனிதுரைப்பது காண்க.
இப்பாட்டில், பெற்றார் எவர் என்றாட்கு திருவைந்தெழுத்தைப் பெற்றவர் என விடை கூறியவாறு. (59)
|