1831. தளிநான் மறையீ ரொற்றிநகர்
தழைக்க வாழ்வீர் தனிஞான
வொளிநா வரசை யைந்தெழுத்தா
லுவரி கடத்தி னீரென்றேன்
களிநா வலனை யீரெழுத்தாற்
கடலின் வீழ்த்தி னேமென்றே
யெளியேற் குவப்பின் மொழிகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; கோயிலாக நான்மறைகளை யுடையவராய்த் திருவொற்றியூர் செல்வத்தால் பெருகுமாறு வாழ்பவரே, ஒப்பற்ற சிவஞான ஒளியையுடைய திருநாவுக்கரசரைத் திருவைந்தெழுத்தை யோதிக் கடலில் மிதந்து கரையேறச் செய்தீரென்றே என்று கேட்டேனாக, சிவபோகத்திற் களித்த நாவலூர் நம்பியாரூரரை இரண்டெழுத்தால் கடலிற் படிவித்தோம் என்று எளியேனாகிய எனக்கு மகிழ்ச்சியுடன் சொல்லுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
தளி - கோயில். வேதங்களின் உட்பொருளாவது சிவன் என்று சான்றோர் கூறுவது பற்றி, “தளி நான் மறையீர்” என்றும், சிவன் கோயில் கொண்டுறையும் இடமாவதுபற்றித் திருவொற்றியூர் மக்கட் பெருக்கமும் தொழில் வாணிகமும் கொண்டு விளக்கம் பெறுவது நினைந்து “ஒற்றிநகர் தழைக்க வாழ்வீர்” என்றும் சிறப்பித்துரைக்கின்றார். சிவஞானத் தவ முனிவர் எனச் சேக்கிழார் முதலிய பெரியோர் பரவுதலால் “தனிஞான வொளி நாவரசு” என்று புகழ்கின்றார். கல்லொடு பிணித்து கடலில் தள்ளப்பட்ட போது சிவநாமத் தெழுத்தைந்தும் ஓதிக் கரையேறிய வரலாற்றை நினைவிற் கொண்டு பிச்சைத் தேவர்க்குப்பலியிடுவான் வந்த நங்கை, “நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் அன்றோ” என வினவினாள். உவரி - கடல்; “கல்லினோடெனைப் பூட்டிய மண்கையர், ஒல்லை நீர்புக நூக்க என்வாக்கினால், நெல்லு நீள்வயல் நீலக்குடியரன், நல்ல நாமம் நவிற்றி யுய்ந்தேனரோ” என்று பாடுதலால், எழுத்தைந்தால் உவரிகடந்த செய்தி தெளியப்படும். மிதந்து கரையேறச் செய்தமை புலப்படக் “கடத்தினீர்” என உரைக்கின்றாள். சிவனருளாற் பெற்ற யோக போகத்தில் இருந்தவராதலால், நாவலூரைக் “களி நாவலன்” என்று வள்ளலார் பரவுகின்றார். நாவலன் - நாவலூரன். நம்பியாரூரர்க்காகச் சிவன் பரவையார் மனைக்குத் தூது சென்று இருவரையும் மகிழ்வித்த செய்தியை, “நாவலனை ஈரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம்” என்றார். ஈரெழுத்து - தூது; கடல் - பரவை. பரவையார் பெயரைக் கடலாகக் குறிக்கும் நலத்தைத் “திருவுருவின் மென்சாயல் ஏர் பரவை யிடைப்பட்ட என்னாசை எழுபரவை” (தடுத். 148) என நம்பியாரூரர் கூறுவதனால் அறியலாம். கடலில் வீழ்த்திய செய்தியை வருத்தம் தோன்றக் கூறாமல் மகிழ்ச்சியோடு உரைக்கின்றார் என்றற்கு, “உவப்பின் மொழிகின்றார்” என நங்கை கூறுகிறாள்.
இப்பாட்டில், நாவரசை ஐந்தெழுத்தால் கடலைக் கடக்கச் செய்தீரன்றோ என மொழிந்த நங்கைக்கு, நாவலாரூரரை இரண்டெழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என மொழிந்தவாறு. (60)
|