1832. ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ
ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
றாமுன் றென்பார்க் கயன்மூன்றுந்
தருவே மென்றா ரம்மமிகத்
தேமூன் றினநும் மொழியென்றேன்
செவ்வா யுறுமுன் னகையென்றே
யேமூன் றுறவே நகைக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; ஓம் என்ற பிரணவத்தைச் சிந்தைக்கண் வைத்து நினைப்பவர் உள்ளத்தில் இருப்பவராய்த் திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கின்றீரே, நீவிர் உம்மை அடைந்தவர்க்கு மறாது அருள்புரிவீரோ என்று வினவினேனாக, தா என மூன்று சொல்பவர்க்கு அயலெழுத்தான தி மூன்று தருவேம் என்று சொல்லுகின்றார்; அம்மம்ம, உம்முடைய மொழிகள் மிகவும் தேமூன்றின என்று நான் சொன்னேன்; அதற்கு அவர், சிவந்த வாயிடத்தேயுள்ள நகை தேமூன்றின என்று சொல்லி இன்பமுண்டாக நகைக்கின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
அகந்தை நீங்கி ஞானானுபவம் பெறுதற்கு முயல்வோர் பிரணவ வடிவாயுள்ள சிவனைச் சிந்தைக் கண் வைத்துக் காண்பது பற்றி, “ஓம் ஊன்று உளத்தீர்” என உரைக்கின்றார். ஓங்காரத் துருவாய் நிற்றலின், சிந்திக்கும் உள்ளத்தில் அவன் காட்சி தருகின்றான்; “ஊனங்கத் துயிர்ப் பாய் உலகெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றான்” (வலிவலம்) என்று நம்பியாரூரரும் “ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்” என்று நாவுக்கரசரும் (மழபாடி) கூறுவதால் அறிகின்றோம். ஓங்காரச் சிந்தனை ஞானானுபவம் பெறற்கு வாயிலாம் என்பதை “ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்று, ஆங்காரமற்ற அனுபவம்” (திருமந். 1556) கை கூடும் எனத் திருமூலர் உரைக்கின்றார். “சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்” (வல்லம்) என ஞானசம்பந்தர் உரைப்பதலால், “உற்றார்க் களிப்பீரோ” என்று நங்கை வினவுகிறாள். தா மூன்று என்பது, தாதாதா - முத்தா என்பது. அயல் மூன்று, திதிதி என்ற மூன்று - முத்தி. முத்தா என வேண்டுபவர்க்கு முத்தி தருவேம் என்பதாம். நும்முடைய மொழிகள் தேம் (தேனின் இனிமை) ஊன்றின என்று பொருள்படத் தேமூன்றின என்றாளாக, தே மூன்றின எனக் கொண்டு, முத்தே என்று பொருள் செய்து, உன் சிவந்த வாயிற் பற்கள் முத்தே என்பாராய், “தேமூன்றின செவ்வாய் உறும் உன் நகை” என்றார். ஏமம் - இன்பம்; கடைகுறைந்து ஏம் என நின்று, “ஏம் ஊன்றுற நகைக்கின்றார்” என வந்தது.
இதனால், உற்றோர்க் களிப்பிரோ என்றாட்கு முத்தா என்பார்க்கு முத்தி தருவேம் என்று விடை கூறவும், நும்முடைய வாய்மொழி இனிதாயுளது என்றாளாக உன் செவ்வாய்ப் பல் முத்தாயுளது என்று மறுமொழி உரைத்தாராவது பயன். (61)
|