1833. மன்னிவிளங்கு மொற்றியுளீர்
மடவா ரிரக்கும் வகையதுதான்
முன்னி லொருதா வாமென்றேன்
முத்தா வெனலே முறையென்றா
ரென்னி லிதுதா னையமென்றே
னெமக்குந் தெரியு மெனத்திருவா
யின்ன லமுத முகுக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; புகழ் நிலைத்து விளங்கும் திருவொற்றியூர்க் கண் உறைபவரே, மடவராயினார் இரந்து வேண்டும் வகையாதெனில் ஒரு தா ஆகும் என்று சொன்னேனாக, முத்தா என்பதுதான் முறையாகும் என்று அவர் சொன்னார்; இது முறையென்னில் எனக்கு ஐயமாகவுளது என யான் மொழிந்தேன்; அதற்கு அவர் எமக்கும் தெரியும் என்று தமது வாயினின்றும் அமுதம் போன்ற சொற்களை வழங்குகின்றார். இதுதான் என்னையோ. எ.று.
“ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால், பொன்றாது நிற்பது ஒன்றில்” (குறள்) என்றலின், “புகழ் மன்னி விளங்கும் ஒற்றி” என்று கொள்ளப்பட்டது. மடவார் - இளமகளிர்க்கும் அறிவிலார்க்கும் வழங்கும் பொதுப்பெயர். இரப்பவர் மடவராயின், வேண்டும் பொருள் பெறும் வரையில் தாவென்று பன்முறை கேட்பாராதலின், இரக்கப்படுவர் மடவராயின், ஒருமுறை தா எனக் கேட்பது முறையாம் என்றற்கு “மடவார் இரக்கும் வகையது தான் முன்னில் ஒருதா ஆகும் என்றேன்” என்று பலியிடும் நங்கை பகர்ந்தாள்; இரப்பவர் யாவராயினும் மூன்று முறை தா என்றல் அமையும் என்பாராய், “முத்தா எனலே முறை” என்று பலியேற்கும் தேவர் மொழிந்தார். தா என்பது வலி என்று பொருளதாயின், இரப்பது என்பது மானம் கெடவரும் செயலாதலால், மனவலியுடையார்க்கே இயலுவதென்பது தோன்ற, “ஒருதாவாகும்” என்றும், யாவருக்கும் யாவரிடத்தும் இரப்பது வருத்தமான செயலாதலின் “ஒரு தாவாகும்” என்றும், உழைத்தீட்டும் உறுதியுடையார் ஒன்று தருக என இரத்தல் குற்றமாதல் தோன்ற, குற்றப் பொருளில் “தாவாகும்” என்றும் சொன்னதாகக் கொள்ளலுமுண்டு. முன்னுதல் - நினைத்தல். செறிவின்றி எதற்கும் முந்துதல் மடவார்க்கு இயல்பாதலின், முந்தன் என்பதன் விளியேற்ற பெயராகக் கொண்டு “முத்தா என்றல் முறை” யென்றார்; முந்தா என்பது முத்தா என வருதல் அருகிய வழக்காதல் பற்றி ஐயத்திற்குரிய தென்ற பொருள்பட, “என்னில் இதுதான் ஐயம் என்றேன்” என்று சொல்லுகிறாள். என்னில் இதுதான் ஐயம் என்றற்கு “முத்தா இதுதான் என்னிடத்தில் உமக்கு இடுதற்கு ஐயம்” என்று அவள் சொன்னதாகக் கொண்டு, “அது தெரிந்துதான் உன்னிடம் உரையாடினேன்” என உரைப்பாராய் “எமக்குத் தெரியுமெனத் திருவாயில் இன்னல் அமுதம் உகுக்கின்றார்” என்பதாம். முத்தா என்பது முத்தம் தருபவனே எனப் பொருள்படுதலால், அதற்கேற்ப வாயில் முத்தமிடுவார் போல் திருவாயில் எயிறூறும் அமுதம் சொரிகின்றார் என்றதாம். வாய் திறந்துரைத்த இனிய நல்ல சொற்களைத் “திருவாயில் இன்நல் அமுதம்” என்றும், சொல்லுகின்றார் என்பதை அமுதம் என்றதற்கேற்ப “உகுக்கின்றார்” என்றும் உரைக்கின்றாள் என்க.
இதனால், மடவார் இரக்கும் வகையை முன்னில் ஒரு தாவாம் என்றாட்கு முத்தா எனல் முறை என்றாராக, முத்தா இதுதான், என்னில் இடும் ஐயம் என்று அவள் உரைக்க, அவர் எமக்குத் தெரியுமென்று முத்தம் தருகின்றார் என்பதாம். (62)
|