1834. வளஞ்சே ரொற்றி யீரெனக்கு
மாலை யணிவீ ரோவென்றேன்
குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின்
கோல மனைக்க ணாமகிழ்வா
லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின்
னுளத்தி லணிந்தே முணரென்றே
யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; பல்வகை வளம் பொருந்திய திருவொற்றியூரவராகிய தேவரீர் எனக்கு மாலையணிவீரோ என்று கேட்டேனாக, சர்க்கரை போலும் இனிமை கொண்ட சொற்களையுடைய பெண்பாவை போல்பவளே, உன்னுடைய அழகிய மனைக்கண் யாம் மகிழ்வுடன் மனம் கொண்டு அடைந்த போதே உன் மனத்தில் மாலை எய்துவித்தோம்; அதனை உணர்க என்று முறுவல் இளநகை புரிகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
நீர் நில வளங்களுடன் கடல் வளமும் ஒருங்குடையது திருவொற்றியூர்; அதனால் “வளஞ்சேர் ஒற்றி” எனப் பொதுப்பட மொழிகின்றார். பிச்சைத் தேவர்பால் தன் கருத்தைச் செலுத்தினமை நன்கு தெரிவிக்கும் வகையில், “எனக்கு மாலை அணிவீரோ” என்று கேட்டாள்; மாலையணிவீரோ என்ற சொற்களில் மிக்க இனிமை தோன்றவும், மேனியிற் பாவை போன்ற பொற்பு விளங்கவும் உரையாடி நின்றமையின் “குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்” என்று தேவர் கூறுகின்றார். குளம், சர்க்கரையின் இனிமைப் பண்பு. பாவை போல்வாளை பாவையென நிறுத்திப் பாவாய் என முன்னிலைப் படுத்துகின்றார். பிச்சைத்தேவர் பலிவேண்டி மனைக்கண் போந்த போது அவரைக் கண்டவுடன் நங்கையின் உள்ளத்தில் அவர்பாற் காதல் வேட்கை தோன்றி மயக்கியதை அவர் கண்டு கொண்டாராதலின், மால் என்ற சொற்கு மயக்கம் என்பது பொருளாதலையும் துணைகொண்டு, “நின் கோலமனைக்கண் நாம் மகிழ்வால் அடைந்தபோதே நின் உளத்தில் மாலை (மயக்கத்தை) அணிந்தேம்” என்றும், யாம் நின் மனையை அடையாமுன்னும் அடைந்த பின்னும் உண்டாகிய உன் மனநிலையை எண்ணிப்பார் என்பாராய், “உணர்” என்றும், உள்ளத்தில் தோன்றிய வேட்கை மயக்கம் மிக்குறுமாறு இளநகை செய்து நின்ற திறத்தை அவள் தெரிந்து கொள்ளு முறையில் இளஞ்சீர் நகை செய்தருள்கின்றார் என்றும் கூறுகின்றாள். தம்முடைய மனத்தின்கண் நின்ற அன்பு தம்மைக் கண்ட மாத்திரையே நங்கையின் மனத்துட் புகுந்து காதலன்பு தோற்றுவித்தது என்ற குறிப்புப் புலப்பட, நாம் உளம் சேர்ந்து அடைந்தேம்” என்று கூறுகிறார்.
இதனால், தேவர் வரவு கண்டு மாலையணிவீரோ என்றாட்கு, மனையை யடைந்தபோதே உளத்தின்கண் மாலை (மயக்கத்தை) உறுவித்துவிட்டேம் என்று குறிப்பாய் உணர்த்திக் குறுநகையால் அன்பு மலர்வித்தவாறாம். (63)
|