1835. வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர்
விளங்கு மலரே விளம்புநெடு
மாற்றா ரென்றே னிலைகாணெம்
மாலை முடிமேற் பாரென்றார்
சாற்றாச் சலமே யீதென்றேன்
சடையின் முடிமே லன்றென்றே
யேற்றா தரவான் மொழிகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; தனிச் சிறப்புப் பொருந்திய ஒற்றிநகர்க்கண் அமர்ந்திருப்பவரே, விளங்குகின்ற அலரே எடுத்தியம்பும் பெரிதும் மாறுபட்டவர் இங்கே உளர் என்று சொன்னேனாக, இல்லை காண்; அதற்குச் சான்று எமது மாலையணிந்த முடியைப் பார் எனவுரைக்கின்றார்; இது மறுப்புச் சொல்லலாகாத சலமாம் என்று சொன்னேன்; சடையில் உளதேயன்றி முடிமேல் அன்று என்று ஏற்றுக் கொண்டு அன்புடன் உரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
வீறு - பிறிதொன்றற்கில்லாத சிறப்பு. ஒற்றி நகரில் அமர்ந்த தேவரீருடன் உரையாடுவது கண்டு பலர் அறிய அலர் எடுத்தியம்பும் மாற்றார் பலர் இங்கே உள்ளனர் என்பாளாய், “விளங்கும் அலரே விளம்பும் நெடு மாற்றார்” (உளர்) என்றேன் என்றாள்; குறிப்பு மொழியாலன்றி வெளிப்படையாக அலர் கூறுபவர் என்றற்கு “விளங்கும் அலரே விளம்பும் மாற்றார்” என்றும், பொய்யென மறுத்து மறைக்கலாகாத வகையில் எடுத்துரைக்கும் நாநலம் படைத்த பெரும் பகைவர் என்பது புலப்பட “நெடுமாற்றார்” என்றும் உரைக்கின்றாள். நெடுமாற்றார் என்றதற்கு நெடிய பெரிய மாலைக்கண் உளது அலராகிய பூவன்று இலை (வில்வ இலை) என்பாராய், “இலைகாண்” என்றும், இதனை எமது மாலையணிந்த முடிமேல் பார்த்துக்கொள் என்பாராய், “எம்மாலை முடிமேல் பார்” என்றும் கூறுகின்றார். வில்லம், வில்வம் என வழங்குகிறது; உளர் என்றால் இலை என்கிறீர்; இது தருக்கவாதிகளும் விரும்பாத சலவாதம் என்று பொருள்பட, “ஈது சாற்றாச் சலமே” என்று நங்கை மொழிகின்றாள். முடிமேல் பார்த்தால் வாய் பேசாத சலமாகிய கங்கையுளது என்றதாகப் பொருள் கொண்டு, சடையிலன்றோ சலம் உளது; முடிமேல் இல்லை என்பாராய், “சடையில் முடிமேல் அன்று என்றே மொழிகின்றார்” என்றும், சடைமுடி என்பதைச் சடையெனவும் முடியெனவும் பிரித்து முடியை மறுத்துச் சடையைத் தழுவிக் கூறலை “ஏற்று ஆதரவால் மொழிகின்றா” ரென்றும் கூறுகின்றாள். சிவன் சடையில் உள்ள கங்கை பேசாவியல்பிற்றென்பதை, “திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும், கங்கை யாளேல் வாய் திறவாள்” (ஓணகாந்தன்) என்று சுந்தரர் கூறுவது காண்க.
இதனால், அலருரைக்கும் மாற்றார் உளர் என்றாட்கு, எமது முடியில் இலையுண்டேயன்றி மலரில்லை பார் என்றாராக, முடிமேற் சலமுளது என்றாட்கு சலம் முடியிலன்று, சடையில் உளது என்று மொழிந்தவாறு. (64)
|