1836.

     புயப்பா லொற்றி யீரச்சம்
          போமோ வென்றே னாமென்றார்
     வயப்பா வலருக் கிறையானீர்
          வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன்
     வியப்பா நகையப் பாவெனும்பா
          வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே
     யியற்பான் மொழிதந் தருள்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; செல்வமிக்க திருவொற்றியூரில் உள்ளவரே, உம்மைப் பெறாதொழிவேமோ என்று என் மனத்தை வருத்தும் அச்சம் போகுமோ என்று வினவினேனாக, போகுமென்று பொருள்பட ஆம் என்றார்; வெற்றி கொண்ட ஞானசம்பந்தர் முதலிய பாவலர்க்கு இறைவரான நீர், இங்கே உரைத்தது வஞ்சிப்பாவாகுமோ என்று கேட்டேன்; அவர், வியப்புடைய ஆசிரியப்பா என்னும் பாவையும் வெண்பாவையும் கலிப்பாவையும் உரைக்கின்றோம் என்று தனித்த பால்போன்ற மொழி வழங்குகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     புசம் - செல்வம்; இது புயம் என வந்துள்ளது. செல்வ மிகுவிக்கும் நிலப்பகுதியில் திருவொற்றியூர் அமைந்திருப்பது என்றற்குப் “புயப்பால் ஒற்றி” என வுரைக்கின்றார். அச்சம் போமோ என்றதை அச்சம்பு ஓமோ என்று பிரித்து அச்சம்புவாகிய சிவபெருமானை ஓமெனும் பிரணவ மானவனோ என்று கேட்டதாகக் கொண்டு, ஆம் அவன் பிரணவப் பொருளே என்பாராய், 'ஆம்' என்றார். “ஒரு சுடராய் உலகேழும் ஆனான் கண்டாய், ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்” (மழபாடி) என்றும், “ஓங்குமலைக் கரையன்தன் பாவையோடும் ஓருருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண்” (வீழிமிழலை) என்றும் நாவுக்கரசர் உரைக்கின்றார். ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நம்பியாரூரர், மாணிக்கவாசகர் ஆகியோர், தம்முடைய வாழ்வில் தோன்றிய தடைகள் பலவற்றையும் மனவலியோடு ஏற்றுப் பண்சுமந்த பாட்டுக்களையே துணையாகக் கொண்டு வெற்றி கண்டனராதலின், அவர்களை, “வயப்பாவலர்” என்றும், செல்லுமிடந்தோறும் அவர் உளத்தே தங்கி அருட்டுணை செய்தமை நினைந்து, “இறையானீர்” என்றும் பலியிடும் நங்கை உரைக்கின்றாள். எழுப்பிய வினாக்கட்கு அவர் தயக்கமின்றி ஆம் என்றது தன்னை வஞ்சித்தற்காம் என்ற கருத்தால், உரைத்தது வஞ்சிப்பா என்றாட்கு, வஞ்சிப்பா என்பது வியப்பாகவுளது; வஞ்சிப்பாவன்று ஆசிரியப்பாவகை என்பாராய், “வியப்புஆ நகையப்பா எனும் பா என்றும், இவ்வாறு வெண்பாவும் கலிப்பா வகையும் உரைப்பேம் என்பாராய், “வெண்பா கலிப்பா உரைத்தும்” என்றும் உரைக்கின்றார். ஆசிரியப்பா, ஆ நகையப்பா எனப்படுகிறது. நகைத்தல், சிரித்தலாதலால், நகை சிரியென்றாயிற்று. பாவகை, விருத்தம், துறை, தாழிசை என மூன்றாகும். ஆசிரியப்பா என்று நில்லாமல் “எனும் பா” என மிகைப்பட மொழிந்தது பாவினத்தைக் கொள்ளற்காகும். அவற்றுள் இவ்விங்கித மாலைச் செய்யுள் ஆசிரிய விருத்தம் என அறிக. பிறவிடங்களில் வெண்பாவும் கலிப்பாவும் அவற்றின் வகையுமாகப் பல பாட்டுக்கள் பாடியிருப்பதுபற்றி “வெண்பாவும் கலிப்பாவும் உரைத்தும்” என்று கூறிகின்றார். திரிசொற் கலப்பின்றி இயற்சொற்களே மிக்குறத் தெடுத்துப்பாடுதல்பற்றி “இயற்பால் மொழி தந்தருள்கின்றார்” என்றலும் பொருந்துவதாம்.

     இதனால், அச்சம் போமோ என்றாட்கு ஆம் என்றும், வஞ்சிப்பா என்றாட்கு, அன்று, ஆசிரியப்பா என்றும், பிறவிடங்களில் வெண்பா வகையும் கலிப்பா வகையும் உரைப்பாம் என்றும் சொன்னவாறு.

     (65)