1837. தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர்
சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
திண்ணம் பலமேல் வருங்கையிற்
சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன்
மடவா யுனது மொழிக்கென்றே
யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; தண்ணிய பொழில்கள் சூழ்ந்த திருவொற்றியூரில் உள்ளவரே, கழன்றுகும் வளையல்களை எம் கையிற் பொருந்தச் சேர்ந்திடுமின் என்று சொன்னேனாக, திண்ணமாக முன்பு சங்கத்தைப் பலவென்னும் சொன்மேல் வருங்கையில் சேர்த்தேம், அதனைத் தெரிந்து கொள் என்றார்; நீவிர் சொல்லும் இம்மொழிக்குப் பொருள் பலவகையாய் உளது என்றேன்; இளயவளே, உனது மொழிக்குத்தான் வண்ணம் வேறு உளது என்று மனதிற் பல நினைவுகள் எழுமாறு சொல்லுகின்றார்; இது தான் என்னையோ. எ.று.
தண்ணம் பொழில் - குளிர்ந்த அழகிய சோலை. தண்ணம் பொழில் சூழ் திருவொற்றியூரிற் கோயில் கொண்டிருப்பவரே என விளிகொண்டனள். மடவாள் - இளையவள். பிச்சைத் தேவரின் உருவும் திருவும், பலி கொணர்ந்த நங்கையின் மனத்தில் காதல் வேட்கையைத் தோற்றுவித்து உடலைச் சுருக்கவே, கையில் அணிந்திருந்த வளை கழன்று விழுவது போலும் உணர்வை எழுப்பினமையின், “சங்கம் கையிற் சேர்த்திடும் என்றேன்” என்று மொழிழ்தாள். சங்கம், சங்கினையறுத்துச் செய்த கைவளை. பல மேல் வருங்கை, பல என்னும் சொல்லின் மேல் வருங்கை, (பல கை) பலகை என்பதாம். பலகையிற் சங்கம் சேர்த்தோம் என்று மதுரையில் சங்கப் பலகைமேல் புலவர்களை இருக்கச் செய்த திருவிளையாடல் இங்கே குறிக்கப்படுகிறது. சங்கத்தைக் கையிற் சேர்த்திடும் என்று சொன்னவட்கு முன்னம் தமிழ்சங்கத்தைச் சங்கப் பலகையிற் சேர்த்தோம்; முன்னம் மதுரையில் பெண்கள் பலர் கைகட்கு வளையல் அணிந்தோம் என்று பொருள்கொளத் தேவர் உரைக்கின்றார். மதுரையில் வளையல் விற்ற திருவிளையாடல் இங்கே நினைவுறுத்தப் படுகிறது. வண்ணம் என்பது ஈண்டுப் பொருள்வகை மேல் நிற்கிறது. வண்ணம் பல என்றவிடத்துப் பல வென்றதற்குப் பலவின் பழம் என்று கொண்டு, உனது மொழிக்குத் தான் பலவின் பழத்தின் வண்ணம் (சுவை) உளது என்று பொருள்படுமாறு உரைக்கின்றார். அது உன் வாயிற்சொல் பலாவின்கனி போன்றுளது; அதன் மணமும் சுவையும் நயந்து ஈக்கள் மொய்ப்பது போல எண்ணங்கள் பல நம் இருவர் மனத்திலும் தோன்றுகின்றன என்ற குறிப்புத் தோன்ற, “எண்ணம் கொள நின்றுரைக்கின்றார்” என்று சொல்லுகின்றாள்.
இதனால், கையிற் சங்கம் சேர்த்திடும் என்றாட்கு, முன்னம் பலகையிற் சேர்த்தோம் என்றாராக, உமது மொழி பல வண்ணமுடைய தென்றாட்கு உனது மொழிக்கே அஃது உண்டென உரைத்தவாறு. (66)
|