1838.

     உகஞ்சே ரொற்றி யூருடையீ
          ரொருமா தவரோ நீரென்றேன்
     முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய்
          மும்மா தவர்நா மென்றுரைத்தார்
     சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன்
          றோகா யுனது மொழிக்கேன்றே
     யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; தலைமை சான்ற திருவொற்றியூரை யுடையவரே, நீவிர் ஒரு மாதவரோ என வினவினேனாக, முகத்தின் கூரிய வேல் போலும் கண்கள் இரண்டு உடையவளே, யாம் மும்மாதவர் என மொழிந்தார்; நும்முடைய சொற்கள் கேட்பதற்குச் சுகமாய் இருக்கின்றன என்று சொன்னேன், அதற்கு மயில் போன்றவளே உனது மொழியைக் கேட்ட அளவில் கிளிகள் வந்து சேர்ந்துவிடும் என்று இம்மைக் கேற்ற விருப்புண்டாம் வகையில் உரையாடுகின்றார்; இது தான் என்னே. எ.று.

     உகம் - தலைமை. இசைத்துறையில் தலையாய பாட்டை உகப் பாட்டென்பதனாலறிக. (சிலப். 14. 1762 உரை) ஒரு மாதவர் - தவம்புரியும் ஒருவர். தவம் புரியும் ஒருவரோ என்று வினவினாட்கு, ஒரு மாதவர் என்ற சொல்லை ஒரு மாதினை மனைவியாக வுடையவரென்று பொருள் படக்கொண்டு, யாம் மூன்று மாதர்களை மனைவியாக யுடையேம் என்று தோன்றுமாறு “மும்மாதவர் நாம் என்றுரைத்தார்” என அறிக. மாதவமுடைய ஒருவர் எனவும், ஒரு மாதவம் உடையவர் எனவும் ஒரு மா தினை யுடையவர் எனவும் பொருள்கொளத்தக்க வகையில் ஒரு மாதவரோ என்று எழுந்த வினாவுக்கு, மூன்று மாதவமுடையர் எனவும், மூன்று மாதரையுடையர் எனவும், மாதவமுடைய யாம் ஒருவரல்ல, மூவர் எனவும் பொருள்பட, “மும்மாதவர் நாம்” என்ற மொழி அமைந்திருப்பது காண்க. கங்கை, உமை, திருமால் எனும் மூவர் மும்மாதர். இங்ஙனம் பல பொருள்படப் பேசுவது கேட்டற்கு இனிமை தருவது நினைந்து, “சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு” என்று பலியிடும் மங்கை பகர்கின்றார். சுகம் என்பது கிளிக்கும் பெயராதலால், உன் சொல்லைக் கேட்டதும் தம்முடைய இனம் என்று கருதிக் கிளிகள் இங்கே வந்து சேர்ந்துவிடும் என்ற பொருள் தோன்றவே, “சுகம் சேர்ந்திடும் உனது மொழிக்கு” என்று சொல்லுகின்றார். நயப்பு - விருப்பு. மாதவர் மொழி பர வாழ்வுக்கு நயப்புண்டாக நிலவும்; மாதரையுடையவர் மொழி இக வாழ்வுக்கு நயப்புண்டாக நிகழும் என்பது விளங்க, “இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார்” என்பதாம்.

     இதனால், ஒரு மாதவரோ என்றாட்கு மும்மாதவரெனவும், சுகம் சேர்ந்திடும் நும்மொழிக்குக் கென்றாட்கு உனது மொழிக்கு எனவும், பரசுகம் சேரவுரைப்பவர் இகசுகம் சேர வுரைக்கின்றார் எனவும் உரையாடியவாறு.

     (67)