1839. ஊரா மொற்றி யீராசை
யுடையே னென்றே னெமக்கலது
நேரா வழக்குத் தொடுகின்றாய்
நினக்கே தென்றார் நீரெனக்குச்
சேராவணமீ தென்றேன்முன்
சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
யாரார் மடவா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடி.
உரை: ஏடீ, சேடி; ஊர் என்று சிறப்பிக்கப்படும் திருவொற்றி நகரை யுடையவரே, ஆசையுடையேன் என்று சொன்னேனாக, எமக்கன்றி அது நுமக்கு இல்லையே; அங்ஙனமிருக்கப் பொருந்தா வழக்குத் தொடுக்கின்றாய் என்று அவர் சொல்லுகின்றார்; இது நீர் எம்மைச் சேராவணம் ஆகும் என மொழிந்தேன்; மடவாய், சேர்தற்கு முன்னம் எழுதித் தந்தவர் யாவர்? என்று கேட்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
மருத நிலத்தனவே ஊர் என்று சிறப்பிக்கப்படுவன; ஒற்றிநகர் நெய்தல் நிலத்தாயினும் மருதவளம் சான்றமைபற்றி ஒற்றியூர் என்று சிறப்பிக்கப்படுகிறது. அதனால் அதனை “ஊராம் ஒற்றி” எனவும், அதனை யுடைமைபற்றி, “ஒற்றியீர்” எனவும் உரைக்கின்றாள். பலியிடும் நங்கை “ஆசையுடையேன்” என்றாளாக, ஆசை நான்கு திசைகட்கும் உரிய பெயராதல் பற்றி, நான்கு திசையும் உடையேன் என்றதாகக் கொண்டு நான்கு திக்குகளையும் உடையாகக் கொண்ட தனது இயல்பு புலப்பட, “எமக்கலது நினக்கு ஏது? இல்லாததை உடைமையாக உரையாடுவது பொருந்தா வழக்கு” என்பாராய், “நேரா வழக்குத் தொடுக்கின்றாய், (ஆசையுடை) எமக்கலது நினக்கு ஏது” என்று கூறுகின்றார். திக்குகளை ஆடையாகக் கருதி இடையில் உடையில்லாதவர் திகம்பரர் எனவும் நக்கர் எனவும் வழங்கப்படுவர். சயினருள் துறவு மேற்கொண்டு ஆடையின்றி உலவுபவர் திகம்பர சயினர்; அமணர் எனவும் குறிக்கப்படுவர். சிவன் பலியேற்கும் பிச்சைத் தேவராய் வருமிடத்து இந்த நக்கவேடம் பூண்பர். அதனால், திக்குகளையே ஆடையாகக் கொள்ளும் திகம்பரக் கோலம் (நிருவாண நிலை) “எமக்கலது நினக்கேது” என்றும், இல்லாததை உடைமையாகக் கொண்டு உரையாடுவது பொல்லா வழக்கு என்பது விளங்க “நேரா வழக்குத் தொடுக்கின்றாய்” என்றும், பிச்சைத் தேவர் மறுத்துரைக்கின்றார். அது கேட்டவள், ஆடையுடையேன் என்னைச் சேரவேண்டுமென்ற என்னை மறுக்கும் உரையாகும் என்பது தோன்ற “நீர் எனக்குச் சேராவணம் ஈது” என்று சொல்லுகின்றாள்; எனக்கு என்றவிடத்து இரண்டாவதன்கண் நான்காம் உருபு வந்து மயங்கியது. சேராவணம் ஈது என்றதைச் சேர் ஆவணம் ஈது என்று பிரித்துச் சேர்தலை வலியுறுத்தும் ஆவண வோலை இது என்றாளெனப் பொருள் பண்ணிக் கொண்டு, சேர்தற்காக முன்பு எழுதித் தந்தவர் உண்டா; உண்டாயின் அவர் யாவர் என்பாராய், “முன் சேர்த்து ஈது எழுதித் தந்தவர் தாம் யாரார்” எனக் கேட்கின்றார்.
இதனால், ஆடையுடையேன் என்றாட்கு ஆசையாகிய உடை நக்கனாகும் எமக்கு அன்றி உனக்கில்லை என்றாராக, என்னைச் சேராவணம் மறுக்கும் உரை ஈது என்று மறுபடியும் சொன்னாளாக, ஆவணம் என்று கொண்டு, அதனை முன்பு எழுதித் தந்தவர் யாவர் என்று வினவுகின்றார் என்றவாறாம். (68)
|