184.

    தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பாற்
        சார்வேன் தனக்குன் னருள் தந்தால்
    வாழ்வே னிலையே லென்செய்கேன்
        வருத்தம் பொறுக்க மாட்டேனே
    ஏழ்வே தனையும் கடந்தவர் தம்
        இன்பப் பெருக்கே என்னுயிரே
    போழ்வேல் கரங்கொள் புண்ணியனே
        புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.

உரை:

     புகழ் பொருந்திய தணிகை மலை யரசே, பகையாகிய மலையைப் பிளந்தெறியும் வேற்படையைக் கையிற் கொண்ட புண்ணிய மூர்த்தியே, எழுவகை வேதனைகளையும் கடந்து நிற்கும் பெரியோரிடத்து ஊறிப் பெருகும் இன்ப வெள்ளமே, எனக்கு உயிராகியவனே, வஞ்சச் செயல்களில் தோய்ந்து வஞ்ச நெஞ்சுடைய மக்களைச் சார்ந்துறையும் எனக்கு உன் திருவருளை நல்குவாயாயின் யான் நல்வாழ்வு பெறுவேன்; இல்லையாயின் யான் யாது செய்வேன்; வருத்தம் மேலிட்டுப் பொறுக்க மாட்டாது கெடுவேன், எ. று.

     போழ்தல் - பிளத்தல். கிரவுஞ்ச மலையை முருகனது வேறுபடை பாய்ந்து பிளந்தெறிந்த வரலாறு நினைவிற் கொண்டு “போழ் வேல்” எனச் சிறப்பித்து, பாவத் தொழிலாற் பலர்க்கும் பகையாய் நின்ற அசுரர்களைக் கொன்று புண்ணியச் செய்கைகள் பெருகச் செய்த நலத்தை வியந்து, “போழ் வேற் கரங்கொள் புண்ணியனே” என்று கூறுகின்றார். புண்ணியத்தின் திருவுருவமென்றற்கு முருகனைப் “புண்ணியன்” எனப் புகழ்கின்றார். உயிரின் உண்மை யறிவை மறைக்கும் எழுவகை ஆவரணங்களை (மறைப்புக்களை) “ஏழ் வேதனை” என இயம்புகின்றார். அவை மாயாவரணம், கிரியாவரணம், பரசத்தியாவரணம், இச்சாவரணம், ஞானாவரணம், ஆதிசத்தியாவரணம், சிற்சத்தியாவரணம் என ஏழாம் என அறிக. இவை பின்னர் உரிய இடங்களில் விளக்கப்படும். இவ்வேதனை யேழும் மண்ணியல் வாழ்வு முதல் சிவபோகப் பெருவாழ்வு ஈறாக இடை நின்று தடுப்பது பற்றி, “ஏழ் வேதனையும் கடந்தவர் தம் இன்பப் பெருக்கே” எனவும், வேதனை கடந்த சிவஞான வடிவில் தூய வுயிரேயாய்த் தோன்றுதலால் முருகனை “என்னுயிரே” எனவும் குறிக்கின்றார். திருவருட் பற்றுக்கோடில்லாதார் வஞ்ச நினைவு செயல்களில் ஈடுபட்டுக் கெடுவது இயல்பாதலால், “தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால்” என்றும், பின்பு அவரையே சார்ந்து துன்புறுவேன் என்பார், “சார்வேன்” என்றும் கூறுகின்றார். இத் தீய சூழலிலிருந்து என்னைக் காக்க வல்லது நின் திருவருளல்லது பிறிதொன்றும் இல்லை யென்பாராய், “உன் அருள் தந்தால் வாழ்வேன்” எனவும், அஃது இல்லையாயின், வேறு துணையில்லாமையால் கெடுவேன்; கெடுமிடத்து எய்தும் துன்பம் பெரிதாதலால் அதனைப் பொறுக்க மாட்டேன் என்பார், “இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்கமாட்டேன்” எனவும் இயம்புகின்றார்.

     இதனால் அருட்டுணை யில்லாவிடின் எய்தக் கடவ வருத்தம் பொறுக்க மாட்டாமை கூறியவாறாம்.

     (4)