1840. வருத்தந் தவிரீ ரொற்றியுளீர்
மனத்தி லகாத முண்டென்றே
னிருத்தந் தொழுநம் மடியவரை
நினைக்கின் றோரைக் காணினது
வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க
முற்றே மற்ற வெல்லையகன்
றிருத்த லறியா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ..
உரை: ஏடீ, சேடி; ஒற்றியூரிலுள்ள பிச்சைத் தேவரே, மனத்தில் ஆழப் புதைந்து வஞ்சமாகிய குற்றமிருத்தலால் உண்டாகும் வருத்தத்தைப் போக்குகின்றிலீர் என்று சொன்னேனாக, அம்பலத்தே நிகழும் நமது திருக்கூத்தைக் கண்டு தொழுகின்ற நம்முடைய அடியவர்களை நினைந்து பேணுபவர்களைக் கண்டால் அந்த அகாதம் தன் பெயருக்கு உரு நல்கும் முதலெழுத்தாகிய அகரம் இலக்கமாகி எண்காத எல்லைக்கு அப்பால் அகன்று போதல் அறிகின்றிலை என்று இயம்புகின்றார்; இது தான் என்னேடி. எ.று.
அகாதம் என்பது ஆழத்தையும் வஞ்சமாகிய குற்றத்தையும் குறிப்பதால், மனத்தில் அகாதம் உண்டென்றதற்கு மனத்தில் ஆழப் புதைந்த வஞ்சமாகிய குற்றம் உண்டென்று உரை காணப்படுவதாயிற்று. மனத்தின்கண் வஞ்சமென்ற குற்றம் புதைந்து கிடத்தலால், அவ்வப்போது உளதாகும் வருத்தம் அறவே போக்கப்படாமல் இருப்பது பற்றி, “மனத்தில் அகாதம் உண்டாதலால் வருத்தம் தவிரீர்” என்று பலியிடும் நங்கை சொல்லுகின்றாள். இறைவன் மனத்தில் அகாதம் உண்டெனப் பொருள் கூறல் பொருந்தாமை அறிக. மனத்தின்கண் வஞ்சமாகிய குற்றம் புதைந்து கிடத்தலால், நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தீது புகுந்து வருத்தம் விளைவிக்கிறது. அதனை அறவே போக்காமை நினைந்து “வருத்தம் தவிரீர்” எனவுரைக்கின்றாள். அம்பலவாணரின் திருக்கூத்தைக் கண்டு தொழும் அடியவர் உள்ளத்தே இறைவன் திருவடியிருந்து சிவவொளி பரப்புகிறது; அப் பெருமக்களை நினைப்பவர் மனமும் சிவம் பெறுதலால், அவர் மனத்தின் இருள்வடிவான வஞ்சமாகிய குற்றம் நீங்கி நெடுங்காத எல்லைக்கு அப்பால் போய்விடுகிறது என்பாராய், “நிருத்தம் தொழும் அடியவரை நினைக்கின்றோரைக் காணின் அகாதம் எண்காத எல்லை யகன்றிருத்தல் அறியாய்” என்கின்றார். அகாதம் என்ற சொல், அகரவெழுத்தை முதலாகக் கொண்டு உருவாதலால், “உருத்தன் பெயர் முன்னெழுத்து” எனவும், அகரம் எழுத்துநிலை மாறி இலக்க மாகிறபோது எட்டாகிய இலக்கமாவதால், அகாதம் எட்டுக்காதம் (அ காதம்) ஆய்விடுகிறது. அகன்றிருத்தல் என்றது ஒருசொல் நீர்மையுற்று நீங்கிய போதலாகிறது.
இதனால், மனத்தில் அகாதம் உண்மையின் வருத்தம் தவிரீர் என்றாட்கு, அடியவரை நினைக்கின்றோரை அகாதம் எண்காத எல்லைக்கப்பால் அகன்றொழியும்; அஃது ஒழிய வருத்தம் தவிரும் என்றாராயிற்று. (69)
|