1841.

     மைய லகற்றீ ரொற்றியுளீர்
          வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
     செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச்
          செவ்வ னுரைத்தா லிருவாவென்
     றுய்ய வுரைப்பே மென்றார் நும்
          முரையென் னுரையென் றேனிங்கே
     யெய்யுன் னுரையை யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; ஒற்றிநகர்க்கண், உறையும் தேவரே, மனத்திற் படிந்துள்ள மயக்கத்தைப் போக்காத நீவீர், என்னை நோக்கி வா என்று சொல்வீரோ என்று கேட்டேனாக, செம்மையான சொல்லாகிய அதன் மேல் சி என்ற எழுத்தை வைத்துச் சிவா என்று செவ்வையாகச் சொன்னால், இரு வா என்று நீ உய்யுமாறு உரைப்போம் என உரைத்தார்; நுமது இவ்வுரை எனதுரையாம் என்றேன்; அது கேட்கும் அவர், இங்கே உனது உரையை நீயே அறிக என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று

     மையல், மயல் என்பதன் போலி வாய்ப்பாடு; மயக்கம் என்பது பொருள். ஆசை காரணமாக மனத்திற் படியும் மயக்கம் காம வெகுளி போல முற்றவும் கடியும் குற்றமன்மையின் “மையலகற்றீர்” என்றும், அதனால் என்னைத் திருவடிக் கீழ் வருக என்று சொல்லீர் என்பாளாய், “வா என்று உரைப்பீரோ என்றேன்” என்று உரைக்கின்றாள். சிகரம் முதலாக ஓதப்படும் திருவைந்தெழுத்துள் இரண்டாவதாகிய வா என்பது திருவருளைக் குறிக்கும் செம்மையுடைமை பற்றி “செய்ய அது” என்றும், அதனொடு சி என்ற எழுத்தைக் கூட்டிச் சிவா என்று ஓத வேண்டும் என்றற்கு “மேற்சிகரம் வைத்துச் செவ்வன் உரைத்தால்” என்றும், வாவா என்று அழைப்பேம் என்பாராய் “இருவா என்று உய்ய வுரைப்பேம்” என்றும் கூறுகின்றார். சிவசிவ என்று ஓதினால், திருவடிக் கீழ் இருப்பாய் வருக என்றாராம், “சிவசிவ என்னச் சிவகதிதானே” (திருமந். 2716) என்றலின், “உய்ய உரைப்பேம்” என்று உரைக்கின்றார். அந்நிலையில் வாவா என்ற நும்முடைய இருவா இரு, வா என என்னுடைய உரையாம் என்பாளாய், “நும்முரை என்னுரை என்றேன்” என்கின்றாள். “ஒற்றியூர் உறையும் அண்ணாமலை யண்ணல் விளம்புவான் எனதுரை தனதுரையாக” (இலம்பை) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. நும் முரை என் உரை என்றதை நுமது உரை யாது சொல்லுக என்று யான் கேட்டதாகக் கொண்டு, உன்னுடைய உரையை அறிந்து கொள் என்பாராய், “எய் உன் உரையை என்கின்றார்” என உரைக்கின்றாள்.

     இதனால், வா என்றுரைப்பீரோ என்றாட்குச் செல்வன் உரைத்தால் இருவா என்று உரைப்பேன் என்றும், நும்முரை என் உரை என்றாட்கு எய் உன் உரையை என்கின்றார் என்றும் சொன்னவா றாயிற்று.

     (70)