1842. தாவென் றருளு மொற்றியுளீர்
தமியேன் மோக தாகமற
வாவென் றருள்வீ ரென்றேனவ்
வாவின் பின்னர் வருமெழுத்தை
மேவென் றதனிற் சேர்த்ததிங்கே
மேவி னன்றோ வாவென்பே
னேவென் றிடுகண் ணென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; பலிதா என்று கேட்டு நிற்கும் திருவொற்றியூர்ப் பிச்சைத் தேவரே, தனித்துறையும் என் மோகதாகம் தீருமாறு வா என்று அருள்புரிவீராக என்று கேட்டேனாக, வா என்ற எழுத்தை யடுத்துப் பின்வரும் எழுத்தைச் சேர்த்து மேவுக என்று சொல்லி, அவ்வாறு செய்வித்தது அதன்கண் தோய்ந்து இங்கு மேவுதற்காம்; மேவினன்றோ உன்னை வா என்று சொல்லுவேன், அம்பை வென்ற கண்ணையுடையவளே, என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.
பலி வேண்டி மனைதோறும் வருபவராதலின், “தாவென்றருளும் ஒற்றியுளீர்” என்று கூறுகிறாள். மோக தாகம் - காதல் வெம்மையால் உண்டாகும் வேட்கை. வருக என அருகே அழைத்து அணைத்தால் தீரும் என்பாளாய். “தாகமற வா என்று அளுள்வீர்” என வுரைக்கின்றாள். அதற்கு அவர், வா என்பதன் பின்வரும் வி என்ற எழுத்தைச் சேர்க்க வரும் வாவியிற் படிந்து வா என்பாராய், “வாவின் பின்னம் வரும் எழுத்தை மேவு என்று அதனிற் சேர்த்தது” என்றும், அதன்கண் மூழ்கி இங்கே வரின் வா என்பேன் என்று சொல்லுவாராய், “இங்கே மேவினன்றோ வா என்பேன்” என்றும் உரைக்கின்றார். ஏ - அம்பு. கண் என்றது கண்ணை யுடையவளே என்று பொருள்படும் அண்மை விளி. வாவி - தண்ணீர் நிறைந்த குளம்; நடைக் கிணறுமாம். நீர் நிறைந்த குளத்திற் படிந்தால் வெம்மையும் தாகமும் தீரும் என்பது கருத்து
.
இதன்கண், மோகதாகம் தீர வா என்று அருளும் என்ற நங்கைக்கு வாவி மேவுக; மேவி இங்கே வரின் அன்றோ வா என்பேன் என்றாராம். (71)
|