1843.

     என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ
          ரென்னை யணைவா னினைவீரேற்
     பொன்மேல் வெள்ளி யாமென்றேன்
          பொன்மேற் பச்சை யாங்கதன்மே
     லன்மேற் குழலாய் சேயதன்மே
          லலவ னதன்மேன் ஞாயிறஃ
     தின்மே லொன்றின் றென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; திருவொற்றியூரில் உள்ள பிச்சைத்தேவரே, என்மேல் அருள்மிகுந்து என்பால் அணைதற்குத் திருவுள்ளம் கொள்வீராயின், பொன்னும் மேற்கொண்டு வெள்ளியும் உமக்கு வந்தெய்தும் என்றேனாக, இருளின் மிக்க கரிய கூந்தலை யுடையவளே, பொன்னுக்கு முன்னையது பச்சை; அதற்கு முன்னது சேய்; அதற்கு முன்னது அலவன்; அதற்கு முன்னது ஞாயிறு; அதற்கு மேல் நாள் எனற்கு ஒன்றுமில்லை என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     அணைவான் நினைதல், மனைவியாகக் கொள்ள விழைதல், பொன்னால் இயன்ற இழைகளும், வெள்ளியால் ஆன பாத்திரங்களும் சீர்களாக எய்தப் பெறுவீர் என்பாளாய், “என்னை அணைவான் நினைவீரேல் பொன்மேல் வெள்ளியாம்” என்றாள். நீரும் பின்பு பலி வேண்டித் திரிய வேண்டா என் மனையே பொன்மலைக்கும் வெள்ளி மலைக்கும் மேம்பட்ட உறைவிடமாம் என்பது குறிப்பெச்சம். பொன் என்பது வியாழக்கிழமை. வியாழத்துக்கு முன்னை நாள் புதன் ஆதலால், “பொன்மேற் பச்சை” என்றார். பச்சை, புதனுக்கும் பொன் வியாழத்துக்கும் பெயர். செவ்வாயைச் சேய் என்பர். திங்கள் இருள் பரவும் இரவில் ஒளிர்வதுபற்றி அல்லவன், அலவன் என்பர். ஞாயிற்றுக்குமேல் நாள் வேறு இல்லாமையால், “ஞாயிறு அஃதின்மேல் ஒன்று இன்று” என்று கூறுகின்றார்.

     இதன்கண், பொன்மேல் வெள்ளியென்றாட்கு, பொன்னாகிய வியாழத்துமேல் புதன், அதற்குமேல் செவ்வாய், அதற்குமேல் திங்கள், அதற்குமேல் ஞாயிறு என்று உரையாடியவாறு.

     (72)