1844.

     வயலா ரொற்றி மேவுபிடி
          வாதர் நாம மியாதென்றேன்
     மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர்
          வந்த விளைய நாமமென்றார்
     செயலார் கால மறிந்தென்னைச்
          சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
     கியலா ரயலா ரென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; நன்செய் வயல்கள் மிக்க திருவொற்றியூரில் உள்ள பிடிவாதக்காரராகிய இவரை நோக்கி உமது பெயர் யாது என்று கேட்டேனாக, காமமயக்கத்தை விளைவிக்கும் இப்பெயர்க்குப் பின்னர்க் கூற நின்ற இளமை சுட்டும் பெயர் என்று கூறினார்; செய்கைக்குரிய காலமறிந்து என்னைச் சேர்வீராக என யான் மொழியவும், சிரித்து உனக்கு இங்கே உறவாய் இயலுவோர் யாவர், அயலார் யாவர் என்று கேட்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     வயல் எனப் பொதுப்பட மொழிந்தமையால் சிறப்புடைய நன்செய் வயல் கொள்ளப்பட்டது. பிடிவாதம், வெற்றி யெய்தும் வரை விடாது கடைப்பிடித்துச் செய்யும் வாதம்; தன்னோடு வாத நடனம் செய்த காளி தோற்றுத் தலை குனியும்வரை ஆடினது பற்றி, பிடிவாதர் என்று குறிக்கின்றாள். வாத நடன மூர்த்திக்குச் சபாபதி என்று பெயர் குறிப்பர். சிவனுடைய மூர்த்தங்கள் இருப்பத்தைந்தனுள் சபாபதி மூர்த்தத்துக்கு அடுத்தது கலியாண சுந்தர மூர்த்தமாதலின், நாமம் யாது என்றாட்கு “மயிலாடும் இப்பெயர்ப் பின்னர் வந்த இளைய நாமம்” என்று உரைக்கின்றார். இளைய நாமம், 'சுந்தரர்' என்பது. மணம்புணரும் வேட்கை நிலவும் காலம் கலியாணமாதலின், “கலியாணசுந்தரர்” என்னும் பெயரை “மயிலாயிடும் இப்பெயர்ப் பின்னர் வந்த இளைய நாமம்” என்று விதந்து மொழிகின்றார். ஆயிடும் - ஆகும். கலியாணசுந்தரர் என்றதை உணர்ந்து கொண்டாளாதலின், பலியிடும் நங்கை, இசைவு தெரிவிக்கும் கருத்தால், உயரிய காலமறிந்து கலியாணம் செய்துகொண்டு என்னைச் சேர்வீராக என்பாளாய், “செயலார் காலமறிந்து என்னைச் சேர்வீர்” என்று கூறுகிறாள். மணத்துக்குரிய காலமறிந்து செய்க; அதுவே செயற்குரிய காலம் என்றற்கு “செயலார் காலம்” என்று சிறப்பிக்கின்றாள். தனது விருப்பத்தை அவர் மேலேற்றிக் கூறும் அவள் செயல் நகைப்பு விளைவித்தமை புலப்படச் “சிரித்து” என்றும், உறவினரும் ஏதிலாரும் அறியச் சேராவிடின் அலரும் பழியுமாம் என அவள் அஞ்சுவது விளங்குதலால், “இயல் ஆர் அயல் ஆர்” என்றும் வினவுகின்றார்.

     இதனால், கலியாணசுந்தரர் என்று தமது பெயர் கூறக்கேட்டுத் தன்னை மணந்துகொள்ள விரும்புகிறார் என்று எண்ணி, அங்ஙனமாயின் காலத்தில் தன்னை மணந்து சேருமாறு வேண்டுகின்றமை குறிப்பாய்த் தெரிவித்தவாறாம்.

     (73)