1845.

     நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர்
          நாகம் வாங்க லென்னென்றேன்
     காலாங் கிரண்டிற் கட்டவென்றார்
          கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
     வேலார் விழிமாப் புலித்தோலும்
          வேழத் தோலும் வல்லேமென்
     றேலா வமுத முகுக்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; நான்காகிய வேதங்கள் சூழ்ந்து முழங்கும் திருவொற்றியூரில் உள்ளவரே, நீவிர் நாகம் வாங்குவது எப்பொழுது என்றேனாக, ஆங்கே கால் இரண்டிற் கட்டற்கு என்று சொன்னார்; நீர்தான் கலைத்தோல் உடுத்த வல்லீரன்றோ என்று மேலும் வினவின எனக்கு, வேல் போலும் விழியை யுடையவளே, பெரிய புலித்தோலும் யானைத்தோலும் உடுத்த வல்லேம் காண் என்று பருகா அமுதமாகிய சொற்களை வழங்குகின்றார்; இதுதான் என்னையோ. எ.று.

     நாகம், மலைக்கும் உடுக்கும் ஆடைக்கும் பொதுப் பெயர். நாகம் மலை யென்றும், வாங்கலை வளைத்தல் என்றும் கொண்டு மலையை வில்லாக வளைத்தல் எப்பொழுது என்றும், ஆடை என்றும், வாங்குவதென்றும், என்றென்பதை எற்று என்றும் கொண்டு ஆடை வாங்குவது எற்றுக்கென்றும் கேட்டேன் என்றதாம். மலைவில் வளைத்தது, இருகாலும் பிணிக்க என்றதாம்; “வரையன்று ஒருகால் இருகால் வளைய நிமிர்ந்து வட்கார் நிரையன் றழலெழ எய்து நின்றேன்” (திருக்கோவை. 152) என்று சான்றோர் உரைப்பது காண்க. இருகால் அரையாதலால், ஆடை வாங்குவது அரையிற் கட்டற் கென்பதாம். நாகமாவது தூசு (ஆடை) என்று கொண்டு அறையிற் கட்டற் கென்றது கேட்டவள், மான் தோல் உடுத்துவீரோ என்பாளாய், “கலைத்தோல் வல்லீர் நீர்” என்று கேட்கின்றாள். அவளுக்கு விடை கூறலுற்ற பிச்சைத் தேவர், அக்கலைத் தோலேயன்றிப் பெரிய புலியின் தோலும் யானையின் தோலும் அணிய வல்லேன் என்பாராய், “மாப்புலித் தோலும் வேழத் தோலும் வல்லேம்” என்றனர்; அதனைக் கேட்கும் செவிக்கு அமுதம்போல் இனிமையுற உரைக்கலுற்றமையின், “ஏலா அமுதம் உகுக்கின்றார்” என்றும் உரைக்கின்றாள். ஏலா அமுதம் - வாயால் உண்டற்கமையாத அமுதம்; சொல்லாகிய அமுதம் என்று கொள்க.

     இதனால், நாகம் வாங்கல் எற்றுக்கு என்றாட்கு அரையில் கட்டற்கு என்றும், கலைத்தோல் வல்லீரே என்றாட்குப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேம் என்றும் விடையிறுத்த வாறாம்.

     (74)