1846. முடியா வளஞ்சூ ழொற்றியுளீர்
முடிமே லிருந்த தென்னென்றேன்
கடியா வுள்ளங் கையின்முதலைக்
கடிந்த தென்றார் கமலமென
வடிவார் கரத்தி லென்னென்றேன்
வரைந்த வதனீ றகன்றதென்றே
யிடியா நயத்தி னகைக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; கெடாத வளம் பொருந்திய திருவொற்றியூரில் உள்ளவரே, உமது முடிமேல் இருப்பது என்னோ என்று கேட்டேனாக, நீக்கப்படாத அகங்கையின் முதல் நீங்கியது என உரைத்தார்; கமலம் என்னுமாறு வடிவமைந்த கையில் உள்ளது என்னோ என்று வினவினேன்; முதல் நீக்கப்பட்ட அச்சொல்லின் ஈறு நீங்கியது என்று குன்றாத நயத்தோடு பார்த்து நகைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
முடியாதவளம் - கெடாத வளம். புறங்கை போல் விலக்கப்படாத சிறப்புடையதாதலால், அங்கையைக் “கடியா உள்ளங்கை” என்று உரைக்கின்றார். அகங்கை என்பதன் முதலெழுத்தைக் கடிந்தவிடத்து, கங்கை என நிற்கிறது. “முடிமேல் இருந்ததென்” என்று வினவினாட்கு “இருந்தது கங்கை” என்று விடை கூறியவாறாயிற்று. கமலமென அழகமைந்த கையைக் “கமலமென வடிவார் கரம்” எனப் பலியிடும் நங்கை சிறப்பிக்கின்றாள். கமலம் - தாமரை. கமலமென வடிவார் கரம் என்றதைப் பதுமரேகை பொருந்திய கை என்றலும் உண்டு. கரத்தில் உள்ளது என்னை என்று மறுபடியும் அவள் கேட்டதற்கு முன்பு முதல் நீக்கப்பட்டுக் கங்கை என்று நின்ற சொல்லின் ஈறு அகன்றபோது நிற்பது கம்; அதாவது தலை; எமது கரத்தில் இருப்பது தலையோடு என விடையிறுத்தவாறாம். “இடியா நயம்” என்பதில், இடிதல் - குறைதல்.
இதனால், முடிமேல் இருந்தது என்னை என்றாட்கு அகங்கையின் முதல் குறைந்த சொல்லான கங்கை என்றும், கரத்தில் உள்ளது யாது என்றாட்குக் கங்கை என்ற சொல்லின் ஈறு குறைய நிற்கும் கம் (தலை) என்றும் பிச்சைத் தேவர் விடை கூறினாராம். (75)
|