1847.

     ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக
          ருடையீர் யார்க்கு முணர்வரியீ
     ரென்றும் பெரியீர் நீர்வருதற்
          கென்ன நிமித்த மென்றேன்யான்
     துன்றும் விசும்பே காணென்றார்
          சூதா முமது சொல்லென்றே
     னின்றும் முலைதா னென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; நிலைத்த பெரும் புகழ் பெற்ற திருவொற்றியூரை யுடையவராகிய நீவிர் எவரும் உணர்தற்கு அரியவராகவும், எந்நாளும் எவர்க்கும் பெரியவராகவும் இருப்பவர்; அத்தகைய நீவிர் என் மனை நோக்கி வருதற்குக் காரணம் யாது என யான் கேட்டேன்; விசும்பு துன்னும் படிக்கே என அறிக என்று உரைத்தார்; உமது சொல் சூதுபோல் உளதே என்று சொன்னேனாக, இப்போது உன் முலைதான் சூது எனவுரைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.

     ஒன்றுதல் - நிலைபெறுதல். “ஒன்றாவுலகத் துயர்ந்த புகழ்” (குறள்) என்பது காண்க. நுண்ணுணர்வுடையவர்க்கு அறிவரிய பொருளாயவன் என்றற்கு, “யார்க்கும் உணர்வரியீர்” என உரைக்கின்றாள். “உணர்ந்தார்க் குணர்வரியோன்” (கோவை - 9) என்றதற்குப் பொருள் கண்ட பேராசிரியர், “ஒருகால் தன்னை உணர்ந்தவர்கட்குப் பின் உணர்தற்குக் கருவியாகிய சித்தி விருத்தியும் ஒடுங்குதலான் மீட்டுணர் வரியோன்” என்றும், “தவத்தாலும் தியானத்தாலும் எல்லாப் பொருள்களையும் உணர்ந்தவர்க்கும் உணர்வரியோன் எனினும் அமையும்” என்றும் உரைப்பது காண்க. ஒருவர்க்கெய்தும் பெருமை காலந்தோறும் அவர் செயல்மேல் நிற்றலால், எக்காலத்தும் செயற்கரியனவே செய்யும் சிவனது செயலியல்பு சுட்டி, “என்றும் பெரியீர்” எனப் பலியிடும் நங்கை பரவுகின்றாள். நீர் வருதற்கு நிமித்தம் என்ற வினாவின்கண் நீர் என்றதைத் தண்ணீர் என்றும் கொண்டு, தண்ணீர் வானினின்று வருதற்குக் காரணம் மழை பொழியும் விசும்பாகிய மேகம் என்பாராய்த் “துன்னும் விசும்பு காண்” என்று சொல்லுகின்றார். தம்மைக் குறித்ததாகக் கொண்டு, யாம் வருதற்கு நிமித்தம், பெறுதற்குரிய தெய்வ வாழ்வு பெறுவித்தற்கு என்று அறிக என்பாராய்த் “துன்னும் விசும்பு காண்” என்றார் எனினுமாம். துன்னுதல் - அடைதல். இவ்வாறு இரு பொருள்பட உரையாடுவது தனக்குத் தெளிவு நல்காமையால் “உமது சொல் சூதாம்” என்று நங்கை சொல்லுகின்றாள். இளம் பெண்ணின் முலை சூதாடு காய் போல்வது பற்றிச் சூது என்பது கவி மரபாகலின், இப்போது உன் முலைதான் சூதாகவுளது என்பாராய், “இன்று உன் முலைதான் என்கின்றார்” என மொழிகின்றார். நாளை அவை பருத்து வேறு உருக்கொண்டு விடும் என்பது குறிப்பாய் விளங்க, “இன்று உன் முலை சூது” என்று விதந்துரைக்கின்றாராம்.

     இதன்கண், நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றாட்குத் துன்னும் விசும்பு என்று விடை கூறியவர், உமது சொல் சூதாகவுளது என்றாட்கு இன்று உன்முலைதான் சூது என்று உரையாடியவாறு.

     (76)