1848.

     வானார் வணங்கு மொற்றியுளீர்
          மதிவாழ் சடையீர் மரபிடைநீர்
     தானா ரென்றே னனிப்பள்ளித்
          தலைவ ரெனவே சாற்றினர்கா
     ணானா லொற்றி யிருமென்றே
          னாண்டே யிருந்து வந்தனஞ்சே
     யீனா தவணீ யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; வானுறையும் தேவர்கள் வந்து வணங்கும் திருவொற்றியூரில் உள்ளவரே, பிறைத்திங்கள் சூடிய சடையை யுடையவராகிய நீவிர் என்ன மரபைச் சேர்ந்தவர் என்று வினவினேனாக, நனிபள்ளித் தலைவரென்று விடையிறுத்தார்; அங்ஙனம் மாயின் சிறிது ஒற்றியிரும் என்று யான் சொன்னேன்; யாம் அங்ஙனம் இருந்தே வந்துளோம்; நீ மகப்பெறாதவள் என்று மொழிகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     வானார் - வானுறையும் தேவர்கள். முன்னைப் பிறப்பில் மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்தவராதலால், அத்தொடர்பு பற்றி ஒற்றியூர் போந்து வணங்குகின்றமை தோன்ற “வானார் வணங்கும் ஒற்றியூளீர்” என்று புகழ்கின்றார். தொல்காப்பியர் முதலிய பண்டைச் சான்றோர் காலத்தில் நிலம்பற்றியும் தொழில்பற்றியும் வேறுவேறு இனமாக வாழ்ந்த மக்கள், கல்வி, ஒழுக்கம், செல்வம், சமயம், தொழில் முதலிய பலவற்றின் அடிப்படையில் பல்வேறு இனமாகப் பிரித்து தம்மில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு, இனங்கட்கிடையே மணவினையுறவு கொள்ளாமையும் தீண்டாமையும் படைத்துக்கொண்டு வாழ்வு நடத்திய காலத்தில் தோன்றியவராதலின் வடலூரடிகள், “மரபிடை நீர்தான் ஆர்” என்று நங்கை வினவுவதாக உரைக்கின்றார். மரபு, இனம், சாதி, என்பன ஒரு பொருள் மேல் வழங்குவன. நீர் எம்மரபினர் என்றாட்கு, நனி பள்ளித் தலைவர் என்பாராய், “நனி பள்ளித் தலைவர் எனவே சாற்றினர்”. நனிபள்ளி என்பது சிவனுறையும் திருப்பதிகளில் ஒன்று; அதனை “இன் புள்ளித் தெள்ளியார் போற்றித் திகழும் திருநனிபள்ளி” (விண். கலி. 107) என அடிகளார் சிறப்பித்துரைப்பர். பள்ளித் தலைவர் என்பதைப் பள்ளி என்ற இனத்தவர்க்குத் தலைவர் என்றதாகக் கொண்ட நங்கை, அவர் தீண்டாத இனத்தவராகச் சமுதாயம் ஒதுக்கியிருந்தமையின் “அனால் ஒற்றியிரும்” என்று சொன்னாளாம். ஒற்றியிருத்தல் - விலகியிருத்தல். ஒற்றியிரும் என்பதில் ஒற்றி யென்பது ஒன்றியூர் என்று கொண்டு, ஒற்றியிலுருந்தே வந்துள்ளோம் என்பாராய், “ஆண்டேயிருந்து வந்தனம்” என்றும், ஒற்றியூர் இறைவனை வழிபட்டு வந்தாரைக் காணின், வணங்கி வழிபட்டு வந்தனை செய்வது முறையாதலால், நீ எம்மை வந்தி என்பாராய், “சேய் ஈனாதவள் நீ” என்கின்றார். சேய் ஈனாதவள் - மகப்பெறாத பெண். மகப் பெறாதவளை வந்தியா என்னும் வடநூல் மரபு பற்றி வந்தி என்றலும் உண்டு. வந்தி என்பது வந்தனை செய் என்றும் பொருள் தருவதென அறிக.

     இதன்கண், மரபிடை நீர் ஆர் என்று வினவினாட்கு நனிபள்ளித் தலைவர் என விடை கூறியும், பள்ளித் தலைவராயின் ஒற்றியிரும் என்றாட்கு, ஒற்றியிருந்து வந்தனம், நீ வந்தி என்று உரையாடியவாறு.

     (77)