1849. பற்று முடித்தோர் புகழொற்றிப்
பதியீர் நுமது பசுவினிடைக்
கற்று முடித்த தென்னிருகைக்
கன்று முழுதுங் காணென்றேன்
மற்று முடித்த மாலையொடுன்
மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
திற்று முடித்த தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; இருவகைப் பற்றும் ஒழித்த சான்றோர் புகழும் திருவொற்றியூர் என்னும் பதியின் கண் எழுந்தருளும் பிச்சைத் தேவரே, நும்முடைய தேவியாகிய பசுவின் இடைக்கன்று தான் கற்றுமுடித்த விற்றிறத்தை என் இரண்டு கைக்கன்றுகளின் வாயிலாகக் காண்பீராக என்று சொன்னேனாக, முடியிட்டுத் தொடுக்கப்பட்ட பூமாலையுடன், இடையில் உடுக்கப்பட்ட உன் கலையும் கற்று முடிந்த செயலினவாயினும் இடையிடையே இற்று முடியிடப்பட்ட தென்று கூறுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
பற்று - யான் எனது என்னும் இருவகைப் பற்று. முடித்தோர் என்ற விடத்து முடித்தல், ஒழித்தற் பொருட்டு. “ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார்” (எந்நாள்) என்று தாயுமானாரால் புகழப்பட்டவர் பட்டினத்தடிகள்; “இருநில மடந்தை இயல்பினின் உடுத்த, பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த ஒற்றிமாநகர்” என்று (ஒருபா) அவர் புகழ்வது நினைந்து, “பற்று முடித் தோர்புகழ் ஒற்றிப்பதி” என்று வள்ளலார் கூறுகின்றார். திருமால் ஊர்தியான போது எருதாயினமையின், தேவியாகிய காலையில் பசுவாயினமையின், அவர் ஈன்ற மகனாகிய மன்மதனைக் “கன்று” என்றும், அவன் திருமால் மக்களான பிரமனுக்கும் பிரத்தியும்நனுக்கும் இடையிற் பிறந்தவனானதால் “இடைக்கன்று“ என்றும் பலியிடும் நங்கை கூறுகின்றாள். கன்று, கற்று என வலித்தது. தன் கரும்பு வில்லைக் கொண்டு மலரம்புகளைத் தொடுத்துத் தன்னை மெலிவித்தமையின், “இடைக்கன்று முடித்தது” என்றும், அதனால் தன் கைவளைகள் கழன்று உக்கமை தோன்ற, “என் இருகைக்கன்று முழுதும் காண்” என்றும் உரைக்கின்றாள். கைக்கன்று - கைவளை. முடித்தது - முடித்த செயல். அது கேட்ட தேவர், முடித்ததென்பதை முடிச்சிட்ட தென்று பொருள் கொண்டு, நீ குழலில் முடித்த மாலையும் இடையில் உடுத்த ஆடையும் கற்றுமுடிந்த வேலைப்பாடாயினும், இடையிடையே அறுபட்டு முடிச்சிடப்பட்டவை காண் என்பாராய், “கற்று முடிந்து இற்று முடித்தது” என்று மொழிகின்றார். மாலை தொடுக்கையிலும், ஆடை நெய்கையிலும் நூல் இற்று முடியிடப்படுவது இயல்பென அறிக. முடித்த தென்பதை மாலைக்கும் கலைக்கும் தனித்தனி ஏற்றுக.
இதனால், நுமது பசுவின் இடைக்கன்று முடித்தது காண் என்றாட்கு; நின் மாலையும் கலையும் இற்று முடித்தது காண் என்று விடை கூறியவாறு. (78)
|