185.

    அரைசே யடியர்க் கருள் குகனே
        அண்ணா தணிகை யையாவே
    விரைசேர் கடம்ப மலர் புயனே
        வேலா யுதக்கை மேலோனே
    புரைசேர் மனத்தால் வருந்தி யுன்றன்
        பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
    தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன்
        அந்தோ நின்று தனியேனே.

உரை:

     தணிகைமலைத் தலைவனே, அண்ணனே, அருளரசே, அடியவர்க்கு அருள்புரியும் குகப் பெருமானே, மனம் கமழும் கடம்பு மலர் மாலையணிந்த தோள்களையுடையவனே, வேற்படையை யேந்தும் கையையுடைய மேலவனே, குற்றம் பொருந்திய மனமுடையனாதலால் துன்பம் மிகுந்து உன்னுடைய பூப்போன்ற அழகிய திருவடியைப் புகழ்கின்றேனில்லை; மண்ணுலக வாழ்வில் மயங்குகின்றேனாகையால், தனித்துறைய மாட்டாதவனாய்த் துன்புறுகின்றேன், அருள் துணை செய்க, எ. று.

     அரசு, அரைசு என வந்தது; “அவிர்சடை வானத்தடல் அரைசே” (நீத்தல்) என்று மணிவாசகர் கூறுவது காண்க. அன்பர் மனமாகிய குகைக்குள் இருப்பவனாதலால் “குகன்” என்று குறிக்கின்றார். ஐயன்-தலைவன்; அழகனுமாம். விரை-நறுமணம். “கார்நறுங்கடம்பு” (நற்.34) என்பது நற்றிணை. முருகனுக்குக் கடம்புமாலை சிறந்தது பற்றிக் “கார்க்கடப்பந்தார் எம் கடவுள்” (சிலப். 24 : 117) என இளங்கோவடிகள் இயம்புவது காண்க. வேலாயுதம்-வேற்படை. மேலோன்-மேன்மைப் பண்புடையவன். புரை-குற்றம். நினைவு சொல் செயல் ஆகியவற்றிற் கெல்லாம் மனமே முதலாதலால், “புரைசேர் மனத்தால் வருந்தி” எனவும், மனக் கவலையைப் போக்கற்கு இறைவன் திருவடியை வணங்கி வாழ்த்துவதாகவும் யான் அதனைச் செய்கிலேன் என்பார், “பூம்பொற் பதத்தைப் புகல்கில்லேன்” எனவும் புகல்கின்றார். தரை சேர் வாழ்வு-மண்ணுலகவாழ்வு. மண்ணியல் வாழ்வில் குற்றம் மிகச் செய்யப் படுதலால், “தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன்” எனவும், தக்க துணையிருப்பின் தனிமை யுற்றுத் தவறுகள் பல செய்வேன் என்பாராய், “அந்தோ நின்று தனியேனே” எனவும் உரைக்கின்றார். “மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம்” (நனிபள்ளி) என நாவுக்கரசர் உரைப்பது காண்க.

     இதனால், குற்றமுடைய மனத்தால் மண்ணக வாழ்வில் தயக்க முறுதல் கூறி அருட்டுணை புரிக என வேண்டியவாறாம்.

     (5)