1850. வானங் கொடுப்பீர் திருவொற்றி
வாழ்வீ ரன்று வந்தெனது
மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன்
மாநன் றிஃதுன் மானன்றே
யூனங் கலிக்குந் தவர்விட்டா
ருலக மறியுங் கேட்டறிந்தே
யீனந் தவிர்ப்பா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: “ஏடீ, சேடி; வையத்தில் வாழவாங்கு வாழ்வார்க்கு வானக வாழ்வு” கொடுப்பாராய்த் திருவொற்றியூர்க்கண் உறையும் தேவரீர், அன்றொரு நாள் வந்து எனது மானத்தைக் கெடுத்தீரே என்று நான் சொன்னேனாக, நீ கூறும் இது மிகவும் நன்றாயிருக்கிறதே; யாம் ஏந்தியுளது உனது மான் அன்று; அது ஊனம் மிகுவிக்கும் தாருக வனத்துத் தவசிகள் படைத்து விட்டதென்று உலகமுற்றும் அறிந்தது; நீயே கேட்டறிந்து உன் மனத்திருக்கும் மயக்கமாகிய குற்றத்தைப் போக்குவாயாக என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” எனச் சான்றோர் கூறுதலால், வைப்பவன் சிவனாதல் பற்றி “வானம் கொடுப்பீர்” என்று நங்கை மொழிகின்றாள். பிச்சைத் தேவராய்த் தாருகவனத்து முனிமகளிர் மனைக்குச் சென்று உடுத்த உடையும் கைவளையும் நெகிழ்ந்துவிழ அவரது நிறையைக் கெடுத்ததை நினைந்து பேசுதலால், “அன்று வந்து எனது மானம் கெடுத்தீர்” எனவுரைக்கின்றாள். மானங் கெடுத்தீரென்பதை மான் அங்கு எடுத்தீர் எனப் பிரித்து, முனிவர் யாகத்திற் படைத்துச் சிவன்பால் விடுத்த மானைப் பிடித்துக் கையில் எடுத்து ஏந்திய செய்தியைக் குறிக்கின்றாள் என்று கொண்டு, நீ கூறுவது நன்றன்று, உண்மையுமன்று என்றற்கு “மா நன்று” என்றும், யாம் கையில் ஏந்தும் இந்த மான் உன்னுடையதன்று; தாருகவனத்து முனிவர் விட்டது என்பாராய், “இஃது உன்மான் அன்று தவர் விட்டார்” என்றும், இது பௌராணிக வுலகம் அறிந்த செய்தி; உனக்குத் தெரியாதாயின் அவர்களைக் கேட்டறிக என்றற்கு, “உலகம் அறியும், கேட்டறிந்து ஈனம் தவிர்ப்பாய்” என்றும் எடுத்துரைக்கின்றார். உண்மை தெரியாமல் பேசுவதால் கீழ்மைக்குற்ற முண்டாம் என்பது கொண்டு “ஈனம் தவிர்ப்பாய்” என அறிவுறுக்கின்றார். தாருகவனத்துத் தவமுனிவர் தமது ஆற்றலைச் சிவனுக்கு மாறுபடச் செலுத்திக் குற்றம் மிகப்புரிந்து தாழ்வடைந்தமையால், அவர்களை, “ஊனம் கலிக்கும் தவர்” என்று குறித்துரைக்கின்றார்.
இதன்கண், பலியிடும் நங்கை, எனது மானங் கொடுத்தீர் என்பதை எனது மான் அங்கு எடுத்துக் கையிற் கொண்டீர் என்றதாகக் கொண்டு, மான் உமது அன்று; தவர் விட்டார், உலகம் அறியும், கேட்டறிந்து ஈனம் தவிர்ப்பாய் என்பது தெரிவித்தவாறு. (79)
|