1851. ஞானம் படைத்த யோகியர்வாழ்
நகரா மொற்றி நலத்தீர்மா
லேனம் புடைத்தீ ரணையென்பீ
ரென்னை யுவந்திப் பொழுதென்றே
னூனந் தவிர்த்த மலர்வாயி
னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே
மீனம் புகன்றா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ; சேடி; ஞானமுடைய யோகியர் வாழ்கின்ற நகரமாகிய திருவொற்றியூர்க்கண் வாழும் நலமுடையவரும் திருமாலாகிய பன்றியை அடக்கி அதன் கொம்பினை மாலையில் அணிந்துகொண்டவருமாகிய நீவிர் என்னை நயந்து அருகு அணைக என்று சொல்லுமின் என்று வேண்டினேனாக, குற்றமில்லாத மலர் போன்ற வாய்க்குள்ளே குறுநகை செய்து இவ்வாறு யாம் உரையோம், தாழ்வுண்டாகச் சொல்லுகின்றாயாகலின் என உரைக்கிறார்; இதுதான் என்னேடி. எ.று.
யோகத்தின் பயன் ஞானமாதலால், ஞானப்பயன் கைவரப் பெற்ற யோகியரை, “ஞானம் படைத்த “யோகியர்” என்று சிறப்பிக்கின்றார். அப்பெருமக்களின் வாழ்வு ஊரவர்க்கு மிக்க நலம் பயப்பது பற்றி, “யோகியர் வாழ் நகராம் ஒற்றிநலத்தீர்” என உயர்வுடைமை தோன்ற உரைக்கின்றார். திருமாலாகிய பன்றி தான் பெற்ற வெற்றியால் அறிவு மயங்கித் திரிந்தபோது அதனை அடக்கி வாயிற் கொம்பை ஒடித்து மாலையிற் கோத்து அணிந்துகொண்டது - பற்றிச் சிவனை “மால் ஏனம் புடைத்தீர்” எனப் புகழ்கிறாள். மால் ஏனம் - திருமாலாகிய பன்றி. பன்றியை அடித்து ஒடுக்கினமையால் “புடைத்தீர்” எனல் வேண்டிற்று. என்னையு வந்து இப்பொழுது அணைஎன்பீர் என்று பிச்சைத் தேவரை நோக்கிப் பலியிடும் நங்கை கூறினாள். என்னையுவந்து அணைக என்னுமாறு நீ சொல்லக்கேட்டு நான் உரைப்பது என் ஆண்மைக்கு மாசு விளைவிக்கும் என்பதைக் குறுநகையாற் புலப்படுத்தி, வெளிப்படை மொழியால் உரைக்கோம் என மறுத்து, ஈனம் புகன்றாய் என ஏதுக் காட்டி உரைக்கிறார். உரைக்கேம் என்பது மேற்கோள்; ஈனமாகலின் என்பது ஏது. ஈனம் - ஆண்மைக்கு மாசு நல்கும் குற்றம்.
இதனால், என்னை யுவந்து அணை என்பீர் என்று மொழிந்த நங்கைக்கு நீ சொல்வது கேட்டு உரைக்கேம், ஈனம் புகன்றாய் ஆதலின் என வுரைக்கின்றார் என்பதாம். (80)
|